×

ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடு செய்ய திட்டம் வகுக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுப்பதற்காக உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மயிலவன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், கொரோனா பரவலை தடுக்க 2020ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காலத்தில், தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை. அமெரிக்காவைப் போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு என்று பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஊழியர்களின் ஊதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள சலுகைகள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவில்லை என்பதால், ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுப்பதற்காக உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு,  மனுதாரர் கோரும் உத்தரவை பிறப்பிக்க இயலாது. இது சம்பந்தமாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுத்து 12 வாரங்களில் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.

Tags : Uradangal ,ICC ,Central and State Governments , Course seeks plan to make up for lost wages of private sector employees: Court orders federal, state governments to consider
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...