சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. வடபழனி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கேட்டு மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்திருந்தார். முதல் தகவல் அறிக்கை குறித்த விபரங்கள் முழுமையாக இல்லாததால் புதிய மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக சென்னை மாநகராட்சி ஆணையர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டால் கைதாகாமல் இருக்க நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகர் விவேக் ஏப்ரல் 16 அன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், ஏப்ரல் 17 மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக்கை பார்க்க வந்த மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், கொரோனா தடுப்பூசி, விவேக்கின் உடல் நிலை குறித்து சர்ச்சைக் கருத்துக்களை கூறினார். முகக்கவசம் ஏன் போடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவில் கொரோனாவே இல்லை, எல்லாம் ஏமாற்று, என அரசு குறித்தும், சுகாதாரத்துறைச் செயலர் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.