×

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: இன்று அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகள் செயல்படுவதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், சினிமா தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகள் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஏற்கனவே, டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைப்பட உள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. மற்ற நாட்களில் இரவு 9 மணியுடன்  டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து இன்று முடிவெடுக்கப்படும். மேலும், டாஸ்மாக் கடை பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Tags : Tasmac , New restrictions for Tasmac stores: Announcement today
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்