×

தமிழ் பெருமிதத்தை உணர்த்த பண்பாட்டு பரப்புரை

ஈரோடு: கல்லூரி மாணவ, மாவணவியர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.  ஈரோடு அடுத்துள்ள சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி அரங்கத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசியதாவது: தமிழ்நாடு அரசின், தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் நோக்கம் நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின்கீழ் தமிழ் மரபும்-நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் கிராமப்புற முன்னேற்றம் என்ற தலைப்பில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், ஊடகங்களின் தோற்றமும் மற்றும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.   இதில், மொத்தம் 7 கல்லூரிகளை சார்ந்த சுமார் 960க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடும், தமிழ்ப் பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மண்டல இணை இயக்குநர் (உயர்கல்வித்துறை) கலைச்செல்வி, உதவி இயக்குநர் மதுரா, ஈரோடு தாசில்தார் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். …

The post தமிழ் பெருமிதத்தை உணர்த்த பண்பாட்டு பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...