சென்னை: கொரோனா 2வது அலை தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறுவாபுரி முருகன் கோயில் நேற்று திடீர் மூடப்பட்டது. திருவள்ளூர் பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்திகடன், வேண்டுதல், வழிபட வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று தெலுங்கு வருட பிறப்பு மற்றும் இன்று தமிழ் வருட பிறப்பு என்பதால் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். எனவே, கொரோனா 2வது அலை தொற்று பரவாமல் இருக்கவும் பக்தர்கள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கவும் கோயில்களை மூட அரசு உத்தரவிட்டது. இதனால், நேற்று முதல் சிறுவாபுரி முருகன் கோயில் மூடப்பட்டது. இதனால், கோயிலை நம்பி வைக்கப்பட்டிருந்த கடைகளை மூட போலீசார் உத்தரவிட்டனர். மேலும், ஊர் எல்லையிலேயே பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.