×

நேப்பியர் பாலத்தில் செல்பி எடுத்தபோது கூவத்தில் விழுந்த ஐடி நிறுவன அதிகாரி உயிருடன் மீட்பு

சென்னை: நேப்பியர் பாலத்தின் மீது ‘செல்பி’ எடுத்த போது ஐடி நிறுவன அதிகாரி தவறி கூவம் ஆற்றில் விழுந்தார். சென்னை கொடுங்கையூர் டி.எச்.சாலை சந்திரா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி (30). பொறியாளரான இவர், பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். வழக்கமாக தினமும் மெரினா கடற்கரையில் மூர்த்தி நடைபயிற்சி செய்வது வழக்கம், அதன்படி நேற்று காலை மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்தார். பயிற்சி முடிந்ததும் காலை 7.15 மணிக்கு அண்ணாசதுக்கம் அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து தனது செல்போனில் இயற்கை அழகை ரசித்தப்படி ‘செல்பி’ எடுத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக காற்று பலமாக வீசியது. இதில் நிலைதடுமாறிய மூர்த்தி நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் விழுந்து நீச்சல் தெரியாமல் சகதியில் சிக்கி உயிருக்கு போராடினார். இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சிறப்பு எஸ்ஐ குமார், பாலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சேற்றில் சிக்கிய மூர்த்தியை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. பின்னர் தகவலின்படி விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் தலைமையிலான வீரர்கள் மிதவை மூலம் கயிறு கட்டி மூர்த்தியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இதனால் நேப்பியர் பாலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Napier Bridge , IT company officer rescued after falling into a cove while taking selfies on Napier Bridge
× RELATED நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம்...