×

பேச்சுவார்த்தையில் உடன்பாடு!: கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை கடைகள் திங்கட்கிழமை வரை வழக்கம் போல் செயல்படும்..முதன்மை அதிகாரி அறிவிப்பு..!!

சென்னை: கொரோனா பரவல் காரணமாக சில்லறை கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை கடைகள் திங்கட்கிழமை வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் கோயம்பேட்டில் மொத்த விற்பனை கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியும் சில்லறை கடைகள் இயங்குவதற்கு தடை விதித்தும் தமிழக அரசு நேற்று அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கோயம்பேடு வணிக வளாக நிர்வாக அலுவலகத்தில் சில்லறை வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து சில்லறை வியாபாரிகளுடன் டி.ஆர்.ஓ., உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை  நடத்தினர். இந்த பேச்சுவார்தையானது தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அச்சமயம் சில்லறை வியாபாரிகள் சமூக இடைவெளியோடு சுயற்சி முறையில் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில்லறை வியாபாரிகள், அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது சில்லறை கடைகள் செயல்படாதது போல மொத்த விற்பனை கடைகளும் செயல்பட அனுமதி மறுக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். மேலும் சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் என பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே விதியை வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டத்தில் தற்காலிகமாக கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை கடைகள் திங்கட்கிழமை வரை வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டி.ஆர்.ஓ.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை  அடுத்து உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திங்கட்கிழமை மீண்டும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Coimbade , Negotiation, Coimbatore Market, Retail Stores, Monday
× RELATED கோயம்பேடு கட்சி தலைமை மீதுள்ள...