×

ஜேஎன்யூ நூலகத்தில் அத்துமீறி நுழைந்த 12 மாணவர்களுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: ஜேஎன்யூ பல்கலை நூலகத்தில் அத்துமீறி நுழைந்து படிப்பு அறையை பயன்படுத்திய 12 மாணவர்களுக்கு விசாரணை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து பல்கலையும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டாலும், ஜேஎன்யூ பல்கலையில் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  குறிப்பாக பல்கலையின் நூலகத்தை பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கடந்த மார்ச் 10ம் தேதி ஜேஎன்யூ பல்கலை வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மத்திய நூலகத்தை திறந்து அங்குள்ள படிப்பு அறையில் அமர்ந்து தர்ணா நடத்தினார்கள். இவர்கள் அத்துமீறி நுழைந்துவிட்டதாக ஜேஎன்யூ புகார் தெரிவித்தது.

இந்தநிலையில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததால் மார்ச் 12ம் தேதி நூலகத்தின் கீழ்தளத்தை திறக்கவும், படிப்பு அறையை பயன்படுத்தவும் அனுமதி வழங்கியது.
இதற்கிடையே மார்ச் 31ம் தேதி பல்கலை நூலகத்தில் அத்துமீறி நுழைந்து இருப்பதாக கூறி ஒழுங்குமுறை விசாரணைக்கு ஆஜராகுமாறு 12 மாணவர்களுக்கு தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு அதிகாரி நோட்டீஸ் அனுப்பி  உள்ளார். அந்த உத்தரவில்,’ கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது, அத்துமீறி நூலகத்தில் நுழைந்தது, அங்குள்ள படிப்பு அறையை பயன்படுத்தியது ஆகியவை ஒழுங்கு நடவடிக்கையை மீறிய செயல் ஆகும். ஏனவே ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஏப்ரல் 13ம் தேதிக்கு முன்னர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மனுஸ்மிருதி வழிநடத்துகிறதா?
ஜேஎன்யூவின் இந்த நடவடிக்கைக்கு மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இடதுசாரி மாணவர் அமைப்பான ஆயிசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்,’ ஜேஎன்யூ நூலகத்தை திறக்குமாறு மாணவர்கள் நீண்ட காலம் கோரிக்கை வைத்தனர். அதை பல்கலை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பல நினைவூட்டல் கடிதம் எழுதியும் பயன்இல்லாததால் படிப்பிற்காக மாணவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை குற்ற நடவடிக்கையாக மாற்றி இருப்பதும், இதற்காக விசாரணை கமிட்டியை அமைத்து இருப்பதும் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்லாமல் மலிவான நடவடிக்கை ஆகும்.

இதைவிட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதுகலை பட்டம் பெற்று படித்து முடித்து சென்று விட்ட மாணவிக்கும் இந்த சம்பவம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியதில் இருந்து இதன் உள்நோக்கம் புரிகிறது. ஜேஎன்யூ நூலகத்தில் கடந்த ஒருமாதமாக கிருமிநாசினி தெளிக்கவில்லை. நூலக துப்புரவு ஊழியர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. அவர்கள் மார்ச் 15ம் தேதியில் இருந்து சம்பளம் கேட்டு போராடி வருகிறார்கள். இந்த சூழலில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதா?.

ஜேஎன்யூவில் தடையின்றி கற்பித்தல், கற்றல் மற்றும் படிப்பை எளிதாக்கும் பணிதான் நடக்கும். தற்போது ஜேஎன்யூ அதற்கு நேர்மாறாகவே செயல்படுகிறது. படிப்பை எளிதாக்காவிட்டால் பல்கலைக்கழகம் என்றால் என்ன? நூலகத்தை திறந்து படிப்பதை குற்றவாளியாக்குவது என்பது மனுஸ்மிருதியில் பொதிந்துள்ள ஒரு அணுகுமுறையாகும். அதுதான் இங்கு தற்போதைய ஜேஎன்யூ நிர்வாகத்திற்கு வழிகாட்டுவதாக தெரிகிறது. எனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசை வாபஸ் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.



Tags : JNU , Notice to 12 students who trespassed on the JNU library
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு