×

கொரோனா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்த 2715 தற்காலிக சுகாதார பணியாளர்கள் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்த 2715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் டெங்கு நோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் செல்வகுமார் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெங்கு நோயை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோயை பரப்பும் கொசு புழுக்களை உண்ணக்கூடிய மீன்கள் ஏரி, குளங்களில் வளர்க்கப்படுகின்றன. வீடுகள் மற்றும் தெருக்களில் புகைபோட்டு கொசுக்கள் அழிக்கப்படுகின்றன.

டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய வேலூர், கடலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு நோய் பரவும் இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும், தமிழகத்தில் உள்ள 2894 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் 384 பணிகள் காலியாக உள்ளன. அதை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த 2715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் சிகிச்சைக்காக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு அபாயம் இருக்கும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : Government of Tamil Nadu High Court , Appointment of 2715 temporary health workers to control infectious diseases like corona: Tamil Nadu Government Information in the High Court
× RELATED எந்தெந்த மாநகராட்சிகளில் பெண்களுக்கு...