×

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனால் சென்னையில் தொடங்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீடு தீர்ப்பாயம் கலைப்பு: மத்திய அரசின் திடீர் முடிவால் அதிர்ச்சி

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முயற்சியால் சென்னையில் தொடங்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காப்புரிமைப் பட்டயம் என்பது ஒரு கண்டுபிடிப்பை பொதுமக்களிடம் வெளியிடுவதில் கண்டுபிடிப்பாளர் அல்லது அவர்களின் நியமிக்கப்பட்ட நபருக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு தேசத்தால் வழங்கப்பட்ட பிரத்தியேக உரிமைகள் ஆகும். இதற்கு முன்பு பதிவாகாத கண்டுபிடிப்புகளை பதிவு செய்து, அதனைப் படைத்தவர் மட்டுமே அவர் விரும்புமாறு பயன்படுத்த, அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நாடு தரும் உரிமை. இதனைப் படைப்பவர் தனியுரிமம் என்றோ, படைப்பவர் காப்புரிமம் என்றோ, இயற்றுநர் தனியுரிமம் என்றோ, இயற்றுநர் செய்யுரிமம் என்றோ புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள புராதன பொருட்கள், பாரம்பரியம், கலாச்சாரம் அடங்கிய தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த பொருட்களுக்கான உரிமையை நாம் மட்டுமே கொண்டாட முடியும்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, பவானி ஜமக்காளம், மணப்பாறை முருக்கு போன்ற தமிழகத்தின் பாரம்பரியமிக்க தயாரிப்புகள் இந்த வகையில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இதில் வணிக சின்னங்கள் காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்த காப்புரிமை தொடர்பான பட்டயம் பெற அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயங்களை அணுக வேண்டும்.

இந்த தீர்ப்பாயங்கள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. இந்த தீர்ப்பாயத்தில் சொத்துரிமை பொருட்கள் மீது நிபுணத்துவம் பெற்றவர்கள் நியமிக்கப்படுவர். இதன் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த 2003 செப்டம்பர் 15ல் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தீவிர முயற்சியால் சென்னையில் அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயத்தின் கிளைகள் டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், அலகாபாத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டு கடந்த 4ம் தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், திரைப்பட தணிக்கை மேல்முறையீடு தீர்ப்பாயம், விமான நிலைய ஆணைய மேல் முறையீடு தீர்ப்பாயம் உள்ளிட்ட 8 தீர்ப்பாயங்களையும் கலைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்தது அறிவுசார் சொத்துரிமைக்காக காத்திருப்பவர்கள் மற்றும் அதற்காக ஆஜராகும் வக்கீல்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூத்த வக்கீலும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் கூறும்போது, ‘‘சென்னையில் உள்ள மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்ததை ஏற்க முடியாது. ஒரு சட்டத்தை கொண்டுவந்து அதன் மூலம் உயர் நீதிமன்றங்களை அணுகலாம்  என்று மத்திய அரசு கூறுவது சரியான நடவடிக்கை இல்லை. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்குகளும் சேர்ந்துவிடும். உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே நடத்தபடும் அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீடு தீர்ப்பாயத்தை கலைத்தது ஏற்க முடியாததாகும். பொதுவாக தமிழகத்தை வஞ்சிப்பதே மத்திய அரசின் பிரதான வேலையாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ஒருவர் மட்டுமே இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் ஓரவஞ்சனை என்றே நினைக்கிறேன். இதற்கு நீதித்துறை அரசையும், அரசு நீதித்துறையையும் ஒருவருக்கொருவர் குறை சொல்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட வேண்டும். அப்படி நீதிபதிகள் அதிகரிக்கப்படும்பட்சத்தில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளும் விரைவில் விசாரிக்க முடியும். இல்லையென்றால் நீதிபதிகளுக்குத்தான சுமை அதிகமாகும்’’ என்றார். தமிழகத்தை வஞ்சிப்பதே மத்திய அரசின் பிரதான வேலையாக இருக்கிறது.

Tags : Intellectual Property Appeals Tribunal ,Chennai ,Union Minister ,Murasoli Maran ,Union Government , Former Union Minister Murasoli resigns, intellectual property appeal tribunal in Chennai dissolved
× RELATED இந்திய அளவில் மின்வெட்டு குறைவான...