அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் பொய் கதைகள் பரப்புகின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்க, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் கதைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன,’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 41வது நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பாஜ முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:

விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படும், சில மக்களின் குடியுரிமை பறிக்கப்படும், இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், அரசியலமைப்பு மாற்றி அமைக்கப்படும் என சில தனி நபர்கள், அமைப்புக்கள் பாஜ தலைமையிலான மத்திய அரசின் மீது அபாண்டமான பொய் கதைகளை கூறி வருகின்றன. வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்ற அரசின் நடவடிக்கைகள் குறித்து இந்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது, மிகப்பெரிய சதி திட்டமாகும். தவறான எண்ணங்கள் மற்றும் கற்பனை அச்சத்தை உருவாக்கி, அதன் மூலமாக நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்த செயல்களில் இதுவும் ஒன்றாகும்.  

இது குறித்து பாஜ தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்து விமர்சித்துள்ளன. இவை அனைத்தும் பொய். தேர்தலில் பாஜ. வெற்றி பெறும் போதெல்லாம், வாக்குப்பதிவு இயந்திரம்தான் காரணம் என்றும், தாங்கள் வெற்றி பெற்று விட்டால் மக்கள் ஆதரவுதான் என்றும் எதிர்ககட்சிகள் கூறுகின்றன. அவை இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளன. இந்திய மக்களின் முதிர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, கனவுகளை அவர்கள் பாராட்டுவதும் இல்லை. ஐந்து ஆண்டுகள் நேர்மையாக சேவை செய்வதன் மூலமாக, மக்களின் மனதை பாஜ வெல்லும். ஆட்சியில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்கள் சேவை தான் பாஜ.வின் நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

மோடி தலைமைக்கு பாராட்டு

பாஜ.வின் நிறுவன நாள் விழாவில் பிரதமர் மோடியின் தலைமைக்கு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 1984ம் ஆண்டில் 2 மக்களவை தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்த பாஜ, பிரதமர் மோடியின் தலைமையில்  தற்போது 303 மக்களவை உறுப்பினர்களை கொண்டுள்ளது. மேலும், 12 மாநிலங்களில் பாஜ ஆட்சியில் இருப்பதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மற்றும் தேசியவாதம். மிகவும் பின்தங்கியவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கையோடு இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றுவதற்கு பாஜ முயற்சித்து வருகின்றது,” என்றார்.

Related Stories:

>