கிருஷ்ணகிரி நகரில் கனமழைக்கு குடிசை இடிந்து விழுந்ததில் முதியவர் பலி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முதியவர், குடிசை இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானார். கிருஷ்ணகிரி சின்ன ஏரிக்கரை சாலையின் பின்புறம், இஸ்லாமியர்கள் தொழுகைக்காக அக்‌ஷா மசூதியை புதியதாக கட்டி வருகின்றனர். இதனால் மசூதி முன்பு இருந்த காலி இடத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொழுகை செய்ய பெரிய அளவில் குடிசை அமைத்திருந்தனர். இங்கு இஸ்லாமியர்கள் தினமும் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை, இங்கு 25க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் குடிசை இடிந்து விழுந்தது. இதில் அனைவரும் வெளியே ஓடினர். ஆனால் ஜாபர் (60) என்ற முதியவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஜாபரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

கிருஷ்ணகிரியில், ஜாபர் கடந்த காலங்களில் டீக்கடை நடத்தியுள்ளார்.

பின்னர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வந்தார். தற்போது சட்டசபை தேர்தலில் வாக்களிக்க, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி வந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர்,  நேற்று மாலை தொழுகையில் ஈடுபட்ட போது, குடிசை இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி., சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ மற்றும் நகர செயலாளர் நவாப் ஆகியோர், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

Related Stories:

>