தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேற்று பல்லாவரம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழகத்திற்கு செய்துள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அதிமுக அரசு மீண்டும் கொண்டுவந்து, மக்கள் பயன்பெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்தவுடன், அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஆண்டிற்கு இலவசமாக 6 காஸ் சிலிண்டர்கள், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய், சூரிய சக்தி அடுப்பு, வேலை சுமையை குறைக்க இலவச வாஷிங் மிஷின், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், வீட்டில் ஒருவருக்கு அரசு பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும். எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி அமையவும், பல்லாவரம் தொகுதியில் மக்கள் நல பணிகளை மேற்கொள்ளவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின்போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.
