×

திருமங்கலம் நகரில் ரயில்வே கேட் மூடல்: மக்கள் கடும் அவதி

திருமங்கலம்: தொடர்ந்து ஐந்து நாள்கள் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட்டினால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருமங்கலம் நகரில் ரயில்வே ஸ்டேஷனையொட்டி ரயில்வே கேட் அமைந்துள்ளது. தற்போது மதுரையிலிருந்து தூத்துக்குடி வரையில் இரண்டாவது அகலரயில்வே பாதைபணிக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது திருமங்கலம் ரயில்வே ஸ்டேசன் அருகே நடைபெறுவதால் கடந்த ஐந்து நாட்களாக திருமங்கலம்- மதுரை விமானநிலையம் சாலையில் உள்ள அதாவது ரயில்வே ஸ்டேசனையொட்டியுள்ள ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது.

இதனால் கற்பகம்நகர், காமராஜபுரம், ஆறுமுகம்ரோடு, சோனைமீனா நகர், திவ்யமீனாநகர், விடத்தகுளம், விரிசகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலத்திலிருந்து விடத்தகுளம், அவனியாபுரம் வழியாக மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படும் டவுன் பஸ் மதுரையிலிருந்து திருமங்கலம் ரயில்வே கேட் வரையில் மட்டுமே இயக்கப்படுகிறது. இரவு கடைசி டிரிப் இந்த பகுதிக்கு கட் செய்யப்பட்டு திருப்பரங்குன்றம், திருநகர் வழியாக திருமங்கலத்திற்கு செல்கிறது.

இதனால் இந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அருகேயுள்ள பாண்டியன்நகர் கேட், வடகரை தரைபாலம் வழியாக திருமங்கலம் வந்து செல்கின்றனர். ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதால் ஐந்து தினங்களாக மக்கள் அவதி அடைந்துள்ளனர். கடந்த ஐந்து தினங்களாக ரயில்வே கேட் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் மதுரையிலிருந்து ராஜபாளையம் மார்க்கத்தில் சென்று வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் திருமங்கலத்தின் பல்வேறு கிராமங்களின் வழியாக செல்லத் துவங்கியுள்ளன.

பல பஸ்கள் திருமங்கலம் சோழவந்தான் ரோட்டில் கரடிக்கல், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அமைக்கப்பட்ட புதிய நான்குவழிச்சாலை வழியாக திருநகர் சென்று மதுரைக்கு செல்கின்றன. சில பஸ்கள் உச்சப்பட்டி வழியாக சென்று மாட்டுதாவணிக்கு செல்கிறது. இதனால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் திருமங்கலம் நகரை கடக்க பல மணிநேரம் ஆவதாக புலம்பி வருகின்றனர்.


Tags : Railway Gate ,Wingangalam City , Railway gate closure in Thirumangalam: People are suffering
× RELATED விழுப்புரம் அருகே ஜானகிபுரம் ரயில்வே...