×

சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள தெரியாதவர்கள் தங்களை முக்கிய பிரமுகர்கள் என எப்படி சொல்லிக் கொள்கிறார்கள்? எஸ்.வி.சேகர் வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை: சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என தெரியாதவர்கள், தங்களை முக்கிய பிரமுகர்கள் என்று எப்படி சொல்லிக்கொள்கிறார்கள் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜ பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை, ஆஜராக விலக்கு, வழக்கை ரத்து செய்ய வேண்டும் போன்ற  கோரிக்கைகளுடன் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் பார்வேர்ட் மட்டுமே செய்ததாகவும், பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு என தெரியவந்ததால், உடனடியாக ஏப்ரல் 20ம் தேதியே நீக்கிவிட்டதுடன், உடனடியாக தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருந்தார். இதே விவகாரம் தொடர்பான புகார்களில் அம்பத்தூர் நீதிமன்ற வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றமும், கரூர், திருநெல்வேலி வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், பெண்கள் குறித்து அவதூறாக பதிவான கருத்தை எஸ்.வி.சேகர் பதிவிடவில்லை என்றாலும், அதை பார்வேர்ட் செய்திருப்பதும் குற்றம்தான் என்பதால், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா?  சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக்கொள்கிறார்கள்? என்று கருத்து தெரிவித்தார். பின்னர், எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்ய தடைவிதித்தும், வழக்கில் அவர் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.  வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : ICC ,SV Sehgar , How do those who do not understand how to respect the community call themselves important personalities? ICC opinion in the case of SV Sehgar
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...