சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு திருச்சி கமிஷனர் 2 போலீசை கைது செய்து வாக்குமூலம் வாங்கியது ஏன்? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சென்னை: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு திருச்சி கமிஷனர் திடீரென்று 2 போலீசாரை கைது செய்து மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருச்சியில் தபால் ஓட்டு போடும் போலீசாருக்கு பணம் கொடுத்திருப்பதாக கூறி போலீஸ் கமிஷனர் லோகநாதன், சோதனை நடத்த உத்தரவிட்டார். இந்த சோதனையில் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணம் வாங்கியதாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி கடந்த சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

வழக்கமாக ஒரு வழக்கை ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டால், ஏற்கனவே விசாரணை நடத்திய போலீசார், தங்களுடைய விசாரணையை உடனடியாக நிறுத்தி விடுவார்கள். புதிதாக விசாரணை நடத்தும் பிரிவிடம் வழக்கை ஒப்படைப்பார்கள். ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்ட பிறகு திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன், தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.அவரே, இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை அழைத்து, திமுகவுக்கு எதிராகவும், விஐபிக்களுக்கு எதிராகவும் வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார். ஆனாலும் அவரை தன்னுடைய காரிலேயே அழைத்துக் கொண்டு, சப்-கலெக்டர் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் வாக்குமூலம் அளிக்க அங்கும் மறுத்து விட்டார்.

அதைத் தொடர்ந்து 2 போலீசாரை விசாரணைக்கு வரும்படி தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். அங்கு வைத்து அவர்களை மிரட்டி திருச்சியில் உள்ள விஐபிக்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அவர்களும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பதாகவும் மிரட்டியுள்ளார் கமிஷனர் லோகநாதன். இதனால் பயந்துபோன 2 போலீசாரும், திருச்சியில் உள்ள விஐபிக்கள் யாரையும் நாங்கள் பார்க்கவில்லை. அவர்களிடம் எப்படி நாங்கள் பணம் வாங்கியிருப்போம் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் எப்படி வந்து எங்களிடம் பணம் கொடுப்பார்கள். இதை யாராவது சொன்னால் நம்புவார்களா என்றும் கேட்டுள்ளனர். இதனால், தொடர்ந்து அவர்களை மிரட்டவே, அவர்கள் ஒரு கட்டத்தில் பயப்பட ஆரம்பித்தனர். அப்போது கட்சியினர் யார் மீதாவது புகார் சொன்னால் போதும் என்று கூறி சில குறிப்பிட்ட கட்சியினர் பெயரை சொல்லும்படி கேட்டு வாக்குமூலம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 2 போலீசாரை கைது செய்து ஜாமீனில் விடும்படி கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டதாகவும், அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு வழக்கை சிபிசிஐடி வசம் கொடுக்காமல், ஒரு நாள் முழுவதும் போலீஸ் கமிஷனரே விசாரணை நடத்தியது திருச்சி போலீசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசாரிடம் பணம் பறிமுதல் செய்தால், அந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை நடத்த உத்தரவிடுவதுதான் முறை. போலீசார் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் கணக்கில் வராத பணம் வைத்திருந்தால் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்குத்தான் உத்தரவிட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதனே முன் வந்து தன்னிச்சையாக விசாரணை நடத்தி, வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைப்பதற்கு முன்னதாக ஆதாரங்களை மிரட்டி திரட்ட முயன்றதும் திருச்சி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சதித் திட்டம் இருக்குமோ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதில் உண்மை இருப்பதாகவே நேர்மையான போலீசார் தெரிவிக்கின்றனர். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு வழக்கை சிபிசிஐடி வசம் கொடுக்காமல், ஒரு நாள் முழுவதும் போலீஸ் கமிஷனரே விசாரணை நடத்தியது திருச்சி போலீசில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>