×

கோடையை சமாளிக்க நாகர்கோவிலில் 9 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்: வேகமாக சரிகிறது முக்கடல் அணை நீர்மட்டம்

நாகர்கோவில்: முக்கடல் அணை நீர் மட்டம் சரிவதால், குடிநீர் விநியோகம் செய்யும் நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் 2.75 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இதுதவிர வந்து செல்லும் மக்களையும் கணக்கிட்டால் 3 லட்சம் மக்கள் இருப்பார்கள். இதனால், ஒரு நாளைக்கு 25 எம்.எல்.டி தண்ணீர் தேவையாக உள்ளது. ஆனால், தற்போது 18 எம்.எல்.டி தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. முன்பு 24 மணி நேரம் குடிநிர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள், அதன் பின்னர் 3 நாட்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக  5 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்டு வந்தது. எனினும் கடந்த 15 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்காக அனந்தனாறு கால்வாயில் இருந்து பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணிஅணை தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. கோடையில், சிறப்பு அனுமதி பெற்று குடிநீருக்காக பாசன அணைகளில் இருந்து 50 எம்.எல்.டி தண்ணீர் பெறப்பட்டு வந்தது. தற்போது புத்தன்அணை திட்டம் கொண்டு வரப்பட்டாலும், இந்த திட்டம் நிறைவேற இன்னும் காலதாமதம் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்பு தொடர் மழை காரணமாக முக்கடல் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்தாலும், தற்போது கொளுத்தும் வெயில் மற்றும் பாசன அணைகள் அடைக்கப்பட்டதால் முக்கடல் அணை தண்ணீர் மட்டுமே குடிநீருக்கு பயன்படுவதால் அணை நீர்மட்டம்  வேகமாக சரிந்து வருகிறது.

முக்கடலில் தற்போது 11 அடி தண்ணீர் உள்ளது. ஒரு அடி தண்ணீரை 3 நாட்கள் வரை விநியோகம் செய்ய முடியும். நீர்மட்டம் மைனஸ் வரும் போது, 2 நாட்கள் மட்டுமே விநியோகிக்க முடியும்.  தற்போது நீர்மட்டம் சரிவதால், அணையில் இருந்து வரும் நீரின் அழுத்தம்  குறைந்து வருகிறது. இதனால் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் நாட்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 8 அல்லது 9 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தண்ணீர் மட்டம் சரியும் போது, சுழற்சி முறையில் விநியோகம் செய்யப்படும் நாட்கள் அதிகரிக்கப்படும் நிலை உள்ளது. இதற்குள் மழை பெய்தால், மே மாதம் தண்ணீர் தட்டுபாடு ஏற்படாது. இல்லா விட்டால் பாசன அணையில் இருந்து தண்ணீர் பெற்று நிலைமை சமாளிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.



Tags : Nagargov , Drinking water supply once in 9 days in Nagercoil to cope with summer: Mukkadal dam water level drops rapidly
× RELATED நாகர்கோவிலில் திறன் மேம்பாட்டு கழக...