×

தேர்தல் கொலையை அரங்கேற்றிய கும்பல் சிக்கியது: கூட்டாளிகள் இரண்டு பேரை கொன்று கிணற்றில் வீசியது அம்பலம்

சென்னை: சென்னையில் கவுன்சிலரை கொலை செய்த கூலிப்படைக்கு பேசிய தொகையை தராமல் ஏமாற்றிய கூட்டாளிகள் இருவரை கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட கூலிப்படை தலைவன் ரவுடி ராக்கையன் உள்ளிட்ட 6 பேர் பிடிபட சிசிடிவி காட்சிகளே காரணம் என தெரியவந்திருக்கிறது.

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் கடந்த 13ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் நகைகளை பறித்து சென்றனர். மருத்துவரின் காரையும் அவர்கள் கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ரவுடி ராக்கையன் தலைமையிலான கூலிப்படையினரின் செயல் இது என்பது உறுதியானது.

இதையடுத்து சிவகங்கை விரைந்த தனிப்படை போலீசார் அங்கு பதுங்கி இருந்த ரவுடி ராக்கையன் அவரது கூட்டாளிகள் வந்தவாசி சீனிவாசன், பல்லாவரம் ரஜினி, ஏழுமலை, மைலாப்பூர் கருக்கா வெங்கடேசன், கோட்டூர்புரம் நெல்சன், ஜாபர்கான்பேட்டை மதன்ராஜ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்துவந்த போலீசார் அவர்களின் இதர குற்றங்கள் பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தமது கூட்டாளிகள் அண்ணாதுரை, தங்கபாண்டியன் ஆகியோரை கொலை செய்ததாகவும் சடலங்களில் கல்லைக்கட்டி கிண்டியில் உள்ள கிணற்றில் வீசி இருப்பதாகவும் ரவுடி ராக்கையன் வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் அந்த கிணற்றில் சோதனை நடத்திய போலீசார் இரு சடலங்களையும் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஆவடியில் முருகன் என்கிற கவுன்சிலர் கொல்லப்பட்டார். அவரை தீர்த்துக்கட்டியது ரவுடி ராக்கையன் தலைமையிலான கூலிப்படையினர் தானாம். அதற்கு தூண்டிய அண்ணாதுரை பேசியபடி பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். அதனால் அதிக நாள் சிறையில் இருக்க நேரிட்டதால் ஆத்திரமடைந்த ராக்கையன் ஜாமீனில் விடுதலையானதும் அண்ணாதுரையை சந்திக்க விரும்புவது போன்று நடித்து அவரை கூட்டாளிகள் மூலம் அழைத்துவர கூறி தீர்த்துக்கட்டியுள்ளார்.

அதனை பார்த்துவிட்ட தங்கபாண்டியனையும் விட்டுவைக்க வில்லை. இதன்பின் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடிய நேரத்தில் தான் மருத்துவமனைக்குள் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சிவகங்கைக்கு கூட்டாளிகளுடன் தப்பியதாக ராக்கையன் கூறியுள்ளார். அவர் மீது ஏற்கனவே 6 கொலை வழக்குகள் உள்ள நிலையில் அது தற்போது 8ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் சோதனையில் போலீசார் தீவிரம் காட்டுவதால் 10 நாட்களுக்கு பின்னரே இரட்டை கொலை அம்பலமாகியுள்ளது. அதுவும் கொலையாளிகள் கூறிய பின்பே போலீசாருக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Murder, arrest
× RELATED 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்