சென்னை: கிண்டி கோல்ப் மைதானத்தில் கிளப் ஹவுஸ் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கிண்டியில் உள்ள கோல்ப் மைதானத்தை தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பும், காஸ்மோபாலிட்டன் கிளப்பும் இணைந்து நிர்வகித்து வருகிறது. இந்த நிலத்தை கோல்ப் கூட்டமைப்புக்கும், காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கும் சேர்த்து தமிழக அரசு குத்தகைக்கு வழங்கியிருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பு, கோல்ப் மைதானத்தில் கிளப் ஹவுஸ் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதியளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கனவே கோல்ப் விளையாட வரும் உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு கிளப் ஹவுஸ் இயங்கி வரும் நிலையில், கிளப் ஹவுஸ் கட்ட தங்களின் அனுமதி பெறாமல் அடிக்கல் நாட்டியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. இது, இரு கிளப்களின் கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணானது மட்டுமல்லாமல், தற்போதைய கிளப் ஹவுசின் நிதி நிலைக்கும் விரோதமானது எனவும் மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு, கோல்ப் மைதானத்தில் கிளப் ஹவுஸ் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.