×

மது உள்ளே சென்றால் மதி வெளியே செல்லும்!: தாராபுரம் அருகே அதிமுக-வினர் வழங்கிய மதுவோடு கள்ளசாராயத்தை கலந்து குடித்தவர் பலி..!!

திருப்பூர்: தாராபுரம் அருகே அதிமுக வேட்பாளருடன் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் கொடுத்த மதுவோடு கள்ளசாராயத்தையும் கலந்து குடித்ததால் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள தெருச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி மணிகண்டன். இவரும் அதே பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன், விவேகானந்தன் மற்றும் வசந்த் ஆகியோர் தங்களது குடியிருப்பு பகுதியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது ஒட்டன்சத்திரம் அதிமுக வேட்பாளர் நடராஜ் என்பவருக்கு வாக்கு கேட்டு வேனில் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வேனில் இருந்த கிராம மக்களுக்கு இலவசமாக மதுபாட்டில்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை வாங்கிய மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் மதுவில் போதை ஏறாததால் உள்ளூரில் கிடைத்த கள்ளச்சாராயத்தையும் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் வாந்தியும், மயக்கமும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்ட நிலையில், மணிகண்டன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மணிகண்டனுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்ததாகவும், கர்ப்பிணியான அவரது மனைவி பேறுகாலத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மணிகண்டனின் மரணம் அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Tags : Mathi , Tarapuram, AIADMK, alcohol, illicit liquor, killed
× RELATED மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் தீர்ப்பை...