×

சென்னை செய்தி துளிகள்

லாரி மோதி தொழிலாளி பலி
பெரம்பூர்: வியாசர்பாடி கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜி(45). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாசர்பாடி  சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக சாலையை கடக்கும்போது அகமதாபாத்திலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு பாரிமுனை சென்ற லாரி ராஜி  மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க டயர் ராஜி மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து அங்கு கூடிய மக்கள் லாரி டிரைவரை  சிறைபிடித்தனர். மேலும், அங்கு வந்த வியாசர்பாடி போலீசார் லாரி டிரைவர் வேலாயுதம்(38) என்பவரை மீட்டு வியாசர்பாடி காவல் நிலையம்  அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு உதவி ஆய்வாளர் கற்பகவல்லி சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சம்பவம் தொடர்பாக லாரியின் ஓட்டுனர் வேலாயுதத்தை கைது செய்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து  புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பறித்த 3 பேர் கைது
தாம்பரம்: குரோம்பேட்டையை சேர்ந்த கணேஷ்(55), தமிமுன் அன்சாரி(58) மற்றும் பெருங்களத்தூரை சேர்ந்த அங்குசாமி(70)  ஆகியோர் கடந்த 15ம்  தேதி கடற்கரை - தாம்பரம் மின்சார ரயிலில் பயணித்தனர். அப்போது,  மர்ம நபர்கள் சிலர் அவர்களிடமிருந்து செல்போன்களை பறித்துகொண்டு தப்பி  சென்றனர். இதுகுறித்து, புகாரின்பேரில் தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாசிம் அன்சாரி(23), தீபக்  நோனியா(21), அனன் நோனியா(29) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், இவர்கள் மாம்பலம், கொருக்குபேட்டை,  எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ஆகிய பகுதிகளில் 12 செல்போன்கள் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.  இதனையடுத்து அவர்களிடம் இருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய  13 வயது சிறுவனை வலைவீசி தேடுகின்றனர்.

தலையில் கல்லைபோட்டு இளம்பெண் கொலை
சென்னை: திருப்போரூரில் இருந்து மாம்பாக்கம் செல்லும் வழியில் காயார் அருகே ஈச்சங்காடு வனப்பகுதி உள்ளது. இங்குள்ள பிரதான  சாலையையொட்டி, ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, காயார் எஸ்ஐ ஆனந்தஜோதி ஆகியோர் சம்பவ  இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, தனியார் துணிக்கடை ஒன்றின் சீருடை அணிந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தலையில்  கல்லைபோட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் மது பாட்டில்கள் கிடந்தன.

இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், இளம்பெண் அணிந்து இருந்த  சீருடையை வைத்து விசாரித்தனர். அதில், சென்னை மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்திரா(30). வேளச்சேரியில் உள்ள தனியார்  துணிக்கடையில் வேலை செய்தார். இவரது கணவர் மணி என தெரிந்தது. மேலும் விசாரணையில், கடந்த ஒரு ஆண்டாக, கணவருடன் கருத்து  வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார் என தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் மணியை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து சடலத்தை  அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர் வந்து சடலமாக கிடப்பது, தனது மனைவி சந்திரா என உறுதி செய்தார்.

பின்னர், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 1 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்ததால், அவர் போலீசில் புகார் கொடுக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து, காயார் விஏஓ முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரா வனப்பகுதிக்கு எப்படி வந்தார், அவரை  கொலை செய்தது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
பூந்தமல்லி: பூந்தமல்லி புதுத்தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரசாந்த்(20), தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு  வீட்டின் அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவரது பெற்றோர் கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது பிரசாந்த் தூக்கிட்டு இறந்துகிடந்தார். தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், பிரசாந்த் தலையில் அதிக அளவில்  முடிவளர்த்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


Tags : Chennai News , Raji (45) hails from Vyasarpadi Kalyanapuram 2nd Street. Mercenary
× RELATED சென்னை செய்தி துளிகள்....