×

கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்படும் ரூ.1600 கோடியிலான மேம்பால கட்டுமான பணிக்கு தடை

சென்னை: கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்படும் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 10.10 கிலோ மீட்டர் தொலைவிற்கு உப்பிலிப்பாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை 1600 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலம் கட்ட தமிழக அரசு அறிவித்து அதற்கான பணிகள்  இரவு பகலாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை  அவினாசி சாலை நில உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 8 பேர் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் ‘560க்கும் மேற்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல், நிலம் ஆர்ஜிதம் செய்வதாக கூறுவது சட்டவிரோதம். மேம்பாலம் கட்டப்படும் சாலையின் இரு பக்கமும் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள், குடியிருப்புகள் வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என 560க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறும் ஏற்பட்டுள்ளது.  எனவே நில ஆர்ஜித பணிகளை முறையாக கையாளாமல்  மேம்பால பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி என். சேஷசாயி, மனுதாரர்களின் அனுமதியின்றி அவர்களின் இடத்தை ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்று கூறி உயர்மட்ட சாலை பணிகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், மேம்பால பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அது தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரியும் கோவையை சேர்ந்த சசி அட்வர்டைசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.சாமிநாதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த அவினாசி சாலையில் எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

எனக்கு சொந்தமான நிலத்தை, கையகப்படுத்துவது தொடர்பாக  எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை. சமூக தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்பதால், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மேம்பால கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.செந்தில்குமார் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரி நீதிபதிகள், மேம்பால கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Avinashi Road ,Coimbatore , Coimbatore, Avinashi Road, Rs 1600 crore, work ban
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...