×

தேர்தல் நேரம் என்பதால் பாதுகாப்பு வழங்குவது சிக்கல்!: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு..!!

மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கைதிகளாக 7 தமிழர்கள் சிறையில் இருந்து வருகின்றனர். இதில் ரவிசந்திரன் என்பவர் மதுரை மத்திய சிறையில் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளார். ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கக்கோரி இவர் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அமைச்சரவையும் விடுவிப்பது சம்பந்தமாக முடிவெடுத்து ஆளுனருடைய ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு அது நிலுவையில் உள்ளது. இது சம்பந்தமாக தனது மகன் நீண்ட நாட்களாக நன்னடத்தை விதிகளின்படி மதுரை மத்திய சிறையில் உள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தனது மகனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனு கடந்த 6 மாதங்களாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் பரோல் வழங்க இயலாது. மேலும் தேர்தல் நேரம் என்பதால் ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு வழங்குவது கடினம். எனவே ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஏனெனில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்க முடியாது என்று ஏற்கனவே தமிழக அரசின் உத்தரவு உயர்நீதிமன்ற மதரைக்கிளையில் ரத்து செய்யப்பட்டு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று எடுத்துக்கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அது சம்பந்தமான ஆவணங்களை 19ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினம் ஒத்திவைத்தனர்.


Tags : Tamil Government ,Ravichandra ,Rajivkandi , Election time, Rajiv Gandhi assassination, Ravichandran, parole
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி!