அனுமதியின்றி தேவர் சிலை திறப்பு; போலீஸ் - கிராம மக்கள் மோதல்: 10 போலீசார் காயம்; மேலூர் அருகே பதற்றம்

மேலூர்: மேலூர் அருகே அதிகாலை அனுமதியின்றி தேவர் சிலை திறக்கப்பட்டது. சிலையை எடுத்துச் சென்ற போலீசாருக்கும், கிராம மக்கள் சிலருக்கும் இடைேய மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். பதற்றம் நீடிப்பதால், கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாபட்டி புதூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் மந்தை திடலில் இன்று அதிகாலை 5 அடி உயரம் உள்ள சிமென்ட்டால் ஆன தேவர் சிலை அதிகாலை திடீரென திறக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஏடிஎஸ்பி வனிதா, டிஎஸ்பி ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அனுமதியின்றி திறக்கப்பட்ட தேவர் சிலையை போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி, தூக்கிச் செல்ல முயன்றனர். சிலையை தங்களிடம் தந்து விட வேண்டும் என கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த இளைஞர்கள் மறைந்திருந்து போலீசார் மீது கற்களை வீசினர். இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இளைஞர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் சார்லஸ், கொட்டாம்பட்டி எஸ்ஐ சுதன் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  

காயமடைந்த போலீஸ்காரர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் சதுரகிரி, உதவியாளர் கார்த்திகைவள்ளி ஆகியோர் காயமடைந்தனர். கல்வீச்சில் ஆம்புலன்ஸ் மற்றும் 4 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அகற்றப்பட்ட தேவர் சிலை மேலூர் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராமத்தில் பதற்றம் நீடிப்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: