×

காரில் சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மிரட்டல்: போலீசில் புகார்

கோவில்பட்டி: அதிமுக அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜூ, காரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் மிரட்டல் விடுத்ததாக பறக்கும்படையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, நேற்று முன்தினம் காலை தனது சொந்த ஊரான கடம்பூரில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் சென்றார்.
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் கார் வரும்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் காரை தேர்தல் பறக்கும் படை  அலுவலர் மாரிமுத்து, எஸ்ஐ முருகன் மற்றும் போலீசார் கொண்ட பறக்கும்படை குழுவினர் நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.

ஏற்கனவே கடந்த வாரம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கழுகுமலை பகுதியில் காரில் சென்றபோதும்  இதே பறக்கும்படை குழுவினர் சோதனை நடத்தி உள்ளனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேட்டபோது, தங்கள் கடமையை செய்வதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே பறக்கும்படை சோதனையின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ, உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் தங்களை மிரட்டியதாக பறக்கும்படை அலுவலர் மாரிமுத்து, நாலாட்டின்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யார் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அளித்த பேட்டியின்போது, அதிமுக நிர்வாகிகள் சிலர் சீட்டு கொடுக்கவில்லை என்பதற்காக மாற்றுக் கட்சிக்கு செல்வது அவர்கள் அரசியலில் தற்கொலை செய்வதற்கு சமம். அது அரசியலுக்கும் அழகு இல்லை. வேட்பாளராக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த இயக்கத்திலும் பணியாற்றக் கூடாது. தொகுதி மக்கள் மனநிறைவோடு இருக்கிறார்கள் என்னை மனநிறைவோடு வரவேற்கிறார்கள். யார் எதிர்த்து நின்றாலும் எனக்கு கவலை இல்லை என்றார்.



Tags : Minister ,Kadambur Raju , Tested in the car To the Flying Squadron officers Minister Kadampur Raju intimidation: Complaint to the police
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர்,...