×

அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் நடத்தும் தில்லுமுல்லு எம்சாண்ட் தயாரிப்பில் பல ஆயிரம் கோடி முறைகேடு

* பாறைகளை வெட்டி எடுப்பதால் குன்றுகளாக மாறி வரும் மலைகள்
* 300 அடிக்கும் மேல் பூமியை தோண்டுவதை வேடிக்கை பார்க்கும் கனிமவளத்துறை
* ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு

ஆற்று மணலுக்கு மாற்று. அப்படித்தான் எம் சாண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு  இருக்கிறது. கருங்கல் ஜல்லி கற்களை மண் போல நொறுக்கி எடுப்பது தான் எம் சாண்ட். Manufactured Sand என்பதன் சுருக்கம்தான் M-Sand. ஆற்று மணலைவிட  உறுதியானது என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் எம் சாண்ட் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. எம் சாண்ட் தயாரிக்கும் ஆலைகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் அதை ஆய்வுக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்  என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. ஆற்று மணலை விட விலை குறைவு என்பதால் அரசு கட்டிடம் உள்பட தமிழகத்தில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் எம்சாண்ட் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் எம் சாண்ட் தயாரிப்பு குவாரிகளில் எந்த சோதனையும் நடப்பதில்லை. யாரும் ஆய்வு செய்து சான்றிதழும் கொடுப்பதில்லை. இதில் கல்குவாரி துகள்கள் நிறைந்து இருக்கிறது என்ற புகாரும் உள்ளது. இந்த புகாரை அதிகாரிகளின் ஆய்வும் கிட்டத்தட்ட உறுதி செய்கிறது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதிகாரிகள் கைகள்  கட்டுப்பட்டு உள்ளன. ஆற்று மணல் எடுப்பதற்கு கூட அப்படித்தான். அத்தனை விதிமுறைகள். ஆனால் மூன்று அடிக்கு பதில், 60 அடிகளில் மணல் அள்ளப்பட்டது. அத்தனை விதிமுறை மீறல்களும் அப்பட்டமாகவே நடந்தன. எம் சாண்ட் விஷயத்தில் அப்படியான விதிமீறல் நடந்து தரமற்ற எம் சாண்ட் தயாரிப்பை கண்டுகொள்ளாமல் போனால் விபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

ஏனென்றால் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சுரங்கங்களும் செயல்பட்டு வருகிறது. இதில் 1,200 எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் குவாரிகள் மட்டுமே செயல்படுகிறது. மற்ற குவாரிகளில் ஜல்லி கற்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. குவாரிகளில் குறிப்பிட்ட அளவு ஆழம் மட்டுமே தோண்டி பாறைகளை எடுத்து, ஜல்லிக் கற்களாக உடைக்க வேண்டும். ஆனால்,300 அடிக்கு மேல் தோண்டி பாறைகளை எடுக்கின்றனர். இதனால், பெரிய மலைகள் தற்போது குன்றுகளாக மாறி விட்டது. குன்றுகள் இருந்த பகுதிகளோ 300 அடி ஆழம் கொண்ட அதளபாதாள கிணறாக மாறி விட்டன. ஆனால், அரசுக்கு மிகக் குறைந்த தொகையையே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்செலுத்துகின்றன. இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

குவாரிகளில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பாறை கற்களை ஒப்பந்தம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால், அவர்கள், தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற் போல், பாறை கற்களை வெட்டி எடுக்கின்றனர். இதை தடுக்க வேண்டிய கனிம வளத்துறை அதிகாரிகள், ஒப்பந்த உரிமம் எடுத்த நிறுவனங்களுடன் கைகோர்த்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை ஆழமாக வெட்டி எடுத்து அவற்றை பட்டா நிலத்தில் கிடைத்தவை போல காட்டி அனுமதி பெற்று, கடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் விதிகளையும பின்பற்றப்படுவதில்ல. குவாரி களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, மருத்துவம், காப்பீடு உள்ளிட்ட எந்த வசதிகளையும் செய்து கொடுக்காமல், கொத்தடிமைகளைப்போல நடத்துகிறார்கள்.


alignment=



தற்போது, எம்சாண்ட் குவாரிகள் இடையில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருந்தால் திறக்க கூடாது என்ற விதியில் தளர்த்தி மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இனி வருங்காலங்களில் எம்சாண்ட் குவாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 500 மீட்டர் இடைவெளியில் கூட எம்சாண்ட் குவாரிகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. எம்சாண்ட் குவாரியில் பாறைகளை அரைத்து பொடி ஆக்கும்போது அதிலிருந்து அதிகளவில் தூசு பறக்கும் என்பதாலும் அதில் சிலிகா போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கனிமங்கள் உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த விதிகள் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் கூடுதல் குவாரிகள் அமையும் பட்சத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது தமிழகத்தில் ஆற்று மணலுக்காக மாற்றாக எம்சாண்ட் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஒரிஜினல் எம்சாண்ட் மணல் தயாரிக்கும் குவாரியை கண்டறியும் வகையில் மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று 270 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1,200 குவாரிகள் உள்ள நிலையில், 930 குவாரிகள் மதிப்பீட்டு சான்று பெறவில்லை. இதனால், அந்த குவாரிகள் ஜல்லிக்கற்கள் தயாரிக்கப்படும் தேவையற்ற துகள்களை எம்சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிகிறது. இதில் கட்டப்படும் கட்டிடங்கள் இடிந்து விழ வாய்ப்புள்ளது.

தற்போது எம்சாண்ட் குவாரிகள் அனுமதி பெற்ற குவாரிகள் பெரும்பாலும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், விஐபிக்கள் வேண்டப்பட்டவர்களால் தான் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் இருந்து தான் தற்போது அரசு கட்டுமான பணிகளுக்கு கூட எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் வாங்க வேண்டும் என்று கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர். இதற்காகவே ஆற்றுமணல் குவாரிகளை திறக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதும் நடக்கிறது.  

இந்த மோசடி வேலையில் 4 ஆண்டுகளாக அதிமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலைகளில் பல தரம் குறைவான எம் சாண்ட் தயாரிப்பவை என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் அதிகாரிகள். இன்னொரு முக்கியமான விஷயம்... ஆற்று மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதால் எம் சாண்ட்டை மாற்றாக பார்க்க முடியாது. மலைகளை உடைத்து துகள்களாக்குவதால், வேறு விதமான சூழலியல் பாதிப்புகள் ஏற்படும். எனவே,  இயற்கைக்கு திருப்பி நாம் கொடுக்க முடியாவிட்டாலும், அதை அழிக்காமல் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பது அரசுகளின் கடமை.


alignment=



* விதிகள் சொல்வது என்ன?
1. குவாரிகளைப் பொறுத்தவரையில் கனிமவளத்துறையின் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறுபவரே குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணியைச் செய்ய வேண்டும். குவாரியின் எல்லையை காட்ட மஞ்சள் கற்களை ஊன்றியிருக்க வேண்டும்.
2. குவாரி அருகில் 7.5 மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். குவாரி அருகில் இருந்து 10 மீட்டருக்குள் நீராதாரங்கள், வழித்தடப் பாதைகள் இருக்கக் கூடாது.
3. 50 மீட்டர் தொலைவுக்குள் உயர், குறைந்த அழுத்த மின்பாதை இருக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 50 மீட்டருக்குள் இருக்கக் கூடாது. குவாரி கற்கள் வெட்டப்படும்போது தூசு கிளம்பும் என்பதால், மாசு கட்டுப்பாடு ஏற்பாடாக அருகில் மரக்கன்றுகள்  நடப்பட வேண்டும்.
4. குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களின் கழிவுகளை, குத்தகை இடத்திற்குள்ளேயே போட்டு வைத்திருக்க வேண்டும். பின் அவற்றை அரசே ஏலத்தில் விடும். இதற்காக குவாரிகள் குறித்து முன்கூட்டியே ”மைனிங் பிளான்’ என்ற ஒன்றை உரிமையாளர் வழங்கி, ‘அப்ரூவல்’ பெற வேண்டும். இதுதவிர பல்வேறு சிறிய நிபந்தனைகள் இவ்விஷயத்தில் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் மைனிங் பிளான் ஏதோ கடனுக்கு அப்ரூவல் பெறப்பட்டதாகவே இருக்கிறது. மற்றபடி எந்த விதிமுறையும் கடைபிடிக்கப்பட்டதாக தெரியவில்லை.

* புதிய விதிகள்


எம்சாண்ட் குவாரி (பாறை பொடி தயாரிக்கும் ஆலை) அமைப்பதற்கு கடந்த 2004ல் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விதிகளை உருவாக்கியது.
1. புதிதாக அமைக்கப்படும் எம்சாண்ட் குவாரிகள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைக்க கூடாது. இரண்டு எம்சாண்ட் குவாரிகளுக்கு இடையே குறைந்தது ஒரு கி.மீ தூரம் இருக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

2. சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத்துறை சார்பில்  குறிப்பிட்ட ஆழத்திற்கு மட்டுமே குவாரிகளில் வெட்டி பாறைகள் எடுக்க வேண்டும் என்று விதிகள் வகுத்துள்ளது.


alignment=



* பரிசோதனை முறைகள்
எம் சாண்ட் இரண்டு வகைகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.
1. நுண்ணிய துகள்கள் ஆய்வு, சல்லடை ஆய்வு, வடிவ ஆய்வு ஆகியவற்றிக்கு ரூ.2,000 மட்டுமே கட்டணம். ஆய்வு முடிவுகளும் உடனே கிடைத்துவிடும். சிறு, நடுத்தர கட்டுமானங்களுக்கு இந்த ஆய்வு முடிவுகளே போதுமானது.
2. தொழிற்சாலை, பாலங்கள் உள்ளிட்ட பெரும் கட்டுமானங்களுக்கு இந்தியத் தர நிர்ணய அமைப்பின் வரையறையான ஐ.எஸ். 383:2016 தர நிர்ணயம் கட்டாயம். அங்கு 12 வகையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இதன் முடிவுகள் கிடைக்க சில வாரங்கள் ஆகலாம். இதற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கட்டணம் வாங்கப்படுகிறது.

* மணல் தேவை எவ்வளவு?


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் - தினமும் 10 ஆயிரம் லோடு
தமிழகம் முழுவதும் தேவை- 50 ஆயிரம் லோடு
ஒரு ஆண்டு தேவை- சுமார் ஒரு கோடி யூனிட் மணல்

கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் மணல் கணக்கு தனி.


alignment=



* அவ்வளவுதாங்க அபராதம்


லைசென்ஸ் இல்லாமலோ அல்லது தரம் இல்லாத எந்திரங்களை வைத்து தயாரித்தாலோ 2 வருட சிறை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். அதே சமயம் உற்பத்தி ஆலையில் தரம் குறைவான பொருட்கள் இருந்தால் அதை சரி செய்ய 2 மாதம் அவகாசம் வழங்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. தற்போது எம் சாண்ட் தயாரிப்பை முறைப்படுத்த 110 பக்க வெள்ளை அறிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் தரமணி தேசிய தரப் பரிசோதனை ஆய்வகம், கிண்டி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆய்வகம், பெருங்குடி ஐகொமெட் ஆய்வகம் ஆகிய இடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.
* இந்தியாவில் எம் சாண்ட் அதிகளவில் பயன்படுத்தும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கேரளாவில் ஒவ்வொரு முறை எம் சாண்ட் விற்கப்படும் போது ஐ.ஐ.டி பொறியாளர்கள் அதை ஆய்வு செய்து அனுமதித்த பின்னரே அதை விற்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது.
* தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வகங்கள், பொதுப்பணித் துறையின் மண் தன்மை ஆராய்ச்சி துறை மற்றும் அனைத்துப் பொறியியல் கல்லூரி ஆய்வகங்களிலும் எம் சாண்டை பரிசோதனை செய்யலாம்.
* சர்வதேச அளவில் மணல் இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கிறது சிங்கப்பூர். உலக ஏற்றுமதி மணலில் 13 சதவீதத்தை சிங்கப்பூர் இறக்குமதி மூலம் மட்டுமே பெறுகிறது.
* இரண்டாம் இடத்தில் கனடாவும் (11%), மூன்றாம் இடத்தில் பெல்ஜியமும் (9 %) இருக்கின்றன.

* உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உட்பட 20 நாடுகள் மணலை ஏற்றுமதி செய்கின்றன.


alignment=



* எம் சாண்ட்டின் அதிசயம் புர்ஜ் கலீபா கட்டிடம்
இன்றைய  தேதிக்கு உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபா எம் சாண்ட்டால் கட்டப்பட்டது. 2722 அடி உயரத்தில்(829.8 மீட்டர்) அமைந்துள்ள இந்த கட்டிடம் கட்டும் பணி 2004ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. 2009 அக்டோபர் 1ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. 2010 ஜனவரி 4ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதற்கான செலவு மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி.

* அமெரிக்கா லெவலுக்கு யோசிக்கலாம்
கட்டுமானக் கழிவுகள் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா நெடுஞ்சாலை துறை சாலைப் பணிகளுக்காக கணிசமான அளவை கட்டுமான கழிவுகளை பயன்படுத்திக்கொள்கிறது. தமிழக கட்டுமானத்துறையில் கட்டுமானக் கழிவுகளை 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

Tags : Dillumulu ,Emsant , Thousands of crores of rupees have been misappropriated in the production of Dillumullu Emsant by ministers and the ruling party
× RELATED உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பும்,...