×

பூட்டை உடைத்து பத்திரப்பதிவு ஆபீசில் புகுந்த மர்மநபர்: குஜிலியம்பாறையில் பரபரப்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பத்திர பதிவு அலுவலகத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். குஜிலியம்பாறையில் இருந்து கரிக்காலி செல்லும் ரோட்டில் பத்திர பதிவு அலுவலகம் உள்ளது. ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக உள்ள இந்த அலுவலக சாலை பகலை தவிர, இரவில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும். மேலும் இச்சாலையில் தெருவிளக்குகள் ஏதும் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படும். நேற்று காலை வழக்கம்போல் தூய்மை பணியாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்க வந்துள்ளார். அப்போது மெயின் கேட் பூட்டு திறந்து கிடந்துள்ளது. பின்னர் அலுவலக மெயின் கதவை பார்த்த போது, அதிலிருந்த பூட்டும் திறந்து கிடந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து சார்பதிவாளர் (பொ) பிரபு நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அலுவலகம் வந்த சார்பதிவாளர் இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் மர்மநபர் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்தும், கைகளில் கையுறை அணிந்தவாறும் உள்ளே நுழைந்து, அலுவலகத்தின் உள்ளே சுற்றுவதும் பின்னர் அலுவலக ரெக்கார்டுகளை பார்ப்பதும் என 10 நிமிடம் உள்ளே இருந்து விட்டு, பின்னர் வெறும் கையுடன் திரும்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அலுவலக ரெக்கார்டுகள் ஏதும் காணாமல் போய் உள்ளதாக என ஊழியர்கள் சரிபார்த்தனர். ஆனால் ரெக்கார்டுகள் ஏதும் காணாமல் போகவில்லை என தெரியவந்தது. மேலும் அலுவலகத்தில் இருந்த ரூ.250 பணமும் அப்படியே இருந்தது தெரியவந்தது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணபரிவர்த்தனை முழுவதும் ஆன்லைன் மூலமே நடந்து வருகிறது. இருந்த போதும் உள்ளே சென்றால் பணம் ஏதும் இருந்தால் அதை திருடி சென்று விடலாம் என்ற எண்ணத்தில் வந்தாரா? அல்லது அலுவலக ரெக்கார்டு ஏதேனும் திருடி செல்ல வந்தாரா? என எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து சார்பதிவாள் நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் எஸ்ஐ மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Kujiliampara , Mysterious person who broke the lock and entered the bond office: a commotion in Kujiliampara
× RELATED குஜிலியம்பாறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்