×

கோவையில் வாலிபரிடம் பைக் பறிமுதல் ரூ.1,700 லஞ்சம் வசூலித்த 2 எஸ்எஸ்ஐக்கள் கைது

கோவை:  கோவை காந்திபார்க் பகுதியில் கடந்த 27ம் தேதி வெரைட்டிஹால் ரோடு காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன் (57), கணேசன் (53) ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் கோவைப்புதூரை சேர்ந்த கூடை பின்னும் தொழிலாளி ஸ்ரீதர் (28) வந்தார். அவரை மடக்கிய போலீசார் ஆவணங்களை பரிசோதித்தனர். மது போதையில் வந்திருக்கிறாரா? என சோதனை செய்தனர். பின்னர் போலீசார், ‘‘நீ மது போைதயில் இருக்கிறாய்.

டிரங்க் அன் டிரைவிங் பிரிவில் வழக்குப்போட போகிறோம்’’ என்றனர். இதைக்கேட்ட ஸ்ரீதர், ‘‘நான் மது குடிக்கவில்லை. தூங்காமல் இருந்ததால் சோர்வாக இருக்கிறேன். என்னை விட்டு விடுங்கள்’’ எனக்கூறினார். ஆனால் போலீசார் விடவில்லை. ‘‘3 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் விடுவோம்’’ எனக்கூறி பேரம் பேசினர். அப்போது ஸ்ரீதர், ‘‘வேலை சரியாக கிடைக்கவில்லை. என்னிடம் 500 ரூபாய்தான் இருக்கிறது. இதை வைத்து கொண்டு என்னை விட்டு விடுங்கள்’’ என கெஞ்சினார்.  போலீசார், ‘‘நாங்கள் கேட்ட பணத்தை தராவிட்டால் பைக் கிடைக்காது’’ எனக் கூறினர்.

பின்னர் பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஸ்ரீதர் பஸ் ஏறி வீட்டிற்கு சென்றுவிட்டார். 2 நாட்களுக்கு முன் வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்துக்கு ஸ்ரீதர் சென்றார். அங்கிருந்த போலீசாரை அணுகி, தன்னுடைய பைக்கை திருப்பி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது அங்கே பணியில் இருந்த  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன், ‘‘பணம் தராமல் பைக்கை தரமாட்டோம். பணத்துடன் வா’’ எனக்கூறி அனுப்பிவிட்டார். இதில் அதிருப்தியடைந்த ஸ்ரீதர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.

சிறப்பு எஸ்.ஐ.க்கள் கணேசன் மற்றும் இருளப்பன் ஆகியோர் பணம் கேட்டு பேரம் பேசியதை ஸ்ரீதர் தனது செல்போனில் ரகசியமாக பதிவு செய்தும் அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் நேற்று வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்துக்கு ஸ்ரீதர் சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி அங்கே பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் கணேசன் மற்றும் இருளப்பனிடம் 1,700 ரூபாய் கொடுத்தார். அதை அவர்கள் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Coimbatore , Coimbatore: Two SSIs have been arrested for seizing a bike from a teenager and collecting a bribe of Rs 1,700
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...