×

மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை..அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை மூடப்பட்டதை எதிர்த்து மனு!!

சென்னை : வேட்பாளர் நேர்காணலுக்காக அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலை மூடப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி  விருப்பமனுத் தாக்கல் மற்றும் வேட்பாளர் நேர்காணல் ஆகியவற்றிற்காக கட்சியினர் அதிகமாக வந்து செல்வதால், கடந்த சில நாட்களாக அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் இரு பக்கமும் மூடப்பட்டுள்ளது.இதனால், அந்த சாலையில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாததால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இது தொடர்பாக வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் அதிமுக நிர்வாகிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக சாலை மூடப்பட்டுள்ளதால், பாதசாரிகளும், பொதுமக்களும், அலுவலகம் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளவதால், உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை விசாரணைக்கு ஏற்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதை ஏற்று,  மனுத்தாக்கல் நடைமுறைகளை முடிக்க அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags : Sunface Road ,Exponential Office , அவ்வை சண்முகம் சாலை
× RELATED கடலூர் அதிமுக அலுவலகம் சூறை ஒன்றிய...