×

கடலூர் அதிமுக அலுவலகம் சூறை ஒன்றிய செயலாளர், மகன்கள் உள்பட 20 பேர் மீது வழக்கு பதற்றம் ேபாலீஸ் குவிப்பு

கடலூர், மார்ச் 16: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அவர் தேர்தல் பணிகளை துவக்கி நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பழனிச்சாமிக்கு பதிலாக புவனகிரி பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பழனிச்சாமி மாற்றப்பட்டதை தொடர்ந்து பழனிச்
சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் கடலூர் பாதிரிகுப்பத்தில் உள்ள அதிமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சரமாரியாக கற்களை வீசி அலுவலகத்தை தாக்கி சூறையாடினர். அமைச்சர் சம்பத்தின் அறை மற்றும் கட்சி அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரசார வாகனம், அமைச்சர் சம்பத் மகன் பிரவீன் கார் உள்ளிட்டவையும் அடித்து நொறுக்கப்பட்டது.

இதற்கிடையே அலுவலகத்திற்குள் அமர்ந்திருந்து அமைச்சர் சம்பத் மகன் பிரவீன் மீது ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கும்பல் தாக்குதல் நடத்த வந்த நிலையில் அதே அலுவலகத்தில் முதல் தளத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த சம்பத்தின் ஆதரவாளர்கள் உடனடியாக அமைச்சரின் மகன் பிரவீனை பாதுகாப்பாக காப்பாற்றி அழைத்து சென்றனர். இதையடுத்து பழனிச்சாமி தரப்பினரை அமைச்சர் சம்பத் தரப்பினர் விரட்டினர். அப்போது அமைச்சர் ஆதரவாளர்கள் பழனிச்சாமி மீதும் தாக்குதல் நடத்தினர். அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில் உயிர்தப்பிய அமைச்சர் சம்பத் மகன் பிரவீன் போலீஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டார். அதிமுகவினர் கோஷ்டி மோதலைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் மற்றும் பழனிச்சாமி இல்லம், அமைச்சர் இல்லத்திற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் அமைச்சர் தரப்பை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த அதிமுக அலுவலகத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் தரப்பை சேர்ந்த பாதிரிக்குப்பம் பத்மநாபன் (30) கொடுத்த புகாரின்பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அவரது மகன்கள் சுனில், பிரேம், ஆதரவாளர்கள் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆதரவு கிராமங்களான குமளங்குளம், ராமாபுரம், எம்.புதூர், திருமாணிக்குழி, வெள்ளக்கரை உள்ளிட்ட குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட மாலை கிராமங்களில் பதற்றம் காணப்படுகிறது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Cadalur Exponential Office ,Union ,Neballis ,
× RELATED விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5...