×

தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க வரும் 3-ம் தேதி கடைசி நாள்...ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!!!!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்காக  அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது. இதற்கிடையே,  திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆளுங்கட்சியான  அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை சென்னையில் உள்ள  கட்சி தலைமை அலுவலகத்தில் 15 ஆயிரம் பணம் செலுத்தி விருப்ப மனு பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி அதிமுக சார்பில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட அதிமுகவினர் பலரும் விருப்பம் தெரிவித்து  விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அதிமுக கட்சி தலைமை, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்தும் தீவிர  ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  அதிமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்வற்கான நாள் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை  ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப்பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 24.02.2021 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு விருப்ப மனு விண்ணப்பப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

06.04.2021 அன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு 03.03.2021 புதன்கிழமை வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் என்றும்; அவ்வாறு வழங்கப்படும் அனைத்ழ விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இக்காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : TN Legislative Elections ,EPS , Tamil Nadu Assembly Election: The last day to submit the petition to contest on behalf of the AIADMK on the 3rd ... OBS, EPS joint announcement. !!!!
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்