கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு :40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்!!

சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. வன்னியர் சமுதாயத்தினர், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், தனி இட ஒதுக்கீடு கேட்டு, 1987 செப்., 17 முதல், 23 வரை, சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை ஒடுக்க, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 21 பேர் இறந்தனர்.அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, தி.மு.க., ஆட்சியில், எம்.பி.சி.,என்ற, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ், வன்னியர்கள் உள்ளிட்ட, 108 ஜாதிகளுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதில் போதிய பலன் கிடைக்காததால், வன்னியர்களுக்கு, 15 சதவீத, தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, சி.என்.ராமமூர்த்தி, 2010ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு, உள் இட ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக, உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில், அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், செயல்படுத்தப்படவில்லை.மீண்டும் ராமமூர்த்தி, நீதிமன்றம் செல்ல, 2015ல், சென்னை உயர் நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்தது.பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு, தனியாக, 10.5 சதவீத, உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. அதன் மீதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதை நிறைவேற்றக்கோரி, வன்னியர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு வன்னியர் அமைப்புகள், அரசை வலியுறுத்தி வந்தன.

இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி, வன்னியர்களுக்கு, 20 சதவீத, தனி ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணி என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க.,விற்கு நிபந்தனை விதித்தார். அதன்பின், தன் கோரிக்கையை, உள் ஒதுக்கீடு என, தளர்த்தி கொண்டார். அதைத் தொடர்ந்து, வன்னியர் சமுதாயத்திற்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் பழனிசாமி பேரவையில் தாக்கல் செய்தார்.வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும் 6 மாதத்திற்கு பின் மசோதா மாற்றியமைக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார். சாதிகள் குறித்த விவரம் சேகரிப்புக்குப் பின் 6 மாதம் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும் என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.

*எம்.பி.சி-இல் உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% சீர் மரபினருக்கு 7% இதர பிரிவினருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

*7% உள் ஒதுக்கீட்டைப் பெற உள்ள சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன.

*தமிழகத்தில் மொத்த இட ஒதுக்கீடு 69%- அதில் பிற்படுத்தப்பட்டோர் 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20%, பட்டியலினத்தவர் 19% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

Related Stories:

More
>