×

ஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறும் சூரரைப் போற்று... சிறந்த படம், நடிகர், நடிகை ஆகிய 3 பிரிவுகளில் பரிந்துரை: படக்குழுவினர் மகிழ்ச்சி!!

டெல்லி : ஆஸ்கர் பட்டியலில் 3 விருதுகளுக்கான பிரிவில் சூரரைப் போற்று படம் இடம்பெற்றுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சூரரைப் போற்று. அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் 12-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியத் திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். உலகத்தின் மிகப்பெரிய திரைப்பட விழாவான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து படங்கள் அனுப்பப்படும்.

அந்த வகையில்  ஆஸ்கர் விருது பட்டியலுக்கு சூரரைப் போற்று படம் அனுப்பப்பட்டது. பொதுப்பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது. பொதுப்பிரிவில் போட்டியிடுவதற்கு பல்வேறு நாடுகளிலிருந்து படங்கள் குவிந்தன. அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு, அதிலிருந்து இறுதிப்பட்டியலை ஆஸ்கர் குழுவினர் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

366 படங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் சூரரைப் போற்று படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இடம்பிடித்துள்ளதால் படக்குழுவினர் பெரும் உற்சாகமாகியுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள படங்களை வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்து, இறுதிப்பட்டியலை அறிவிப்பார்கள்.வரும் மார்ச் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை இதற்கான வோட்டிங் நடைபெறும், வரும் மார்ச் 15ம் தேதி இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வெளியிடப்படும்.ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்கர் விருது  வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதனிடையே ஆஸ்கர் பட்டியலில் தங்களுடைய படத்தின் பெயர் இடம்பெற்றதே, பெரிய அங்கீகாரம் என சூரரைப் போற்று படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Tags : Sura ,Oscars , சூர்யா, அபர்ணா
× RELATED கேன்ஸ் திரைப்பட விழா விருதுகளை குவித்த இந்திய திரையுலகம்