×

டெல்லி அரசு துறை வாகனங்கள் 6 மாதத்திற்குள் அனைத்தும் மின்வாகனங்களாக மாற்றப்படும்: துணை முதல்வர் சிசோடியா அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி அரசுதுறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் இன்னும் 6 மாதங்களில் மின்வாகனங்களாக மாற்றப்படும் என்று துணைமுதல்வர் சிசோடியா தெரிவித்தார். டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த மின்வாகனங்கள் பயன்படுத்துவது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 8 வார பிரசார இயக்கம் டெல்லி அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் தொடக்க விழாவில் துணை முதல்வர் சிசோடியா கலந்து கொண்டு பேசியதாவது:
மின்வாகனங்களின் தலைநகராக டெல்லியை மாற்றும் திட்டத்தை முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்துள்ளார். இது மிகப்பெரிய வரலாறு. டெல்லி அரசுதான் இந்தியாவிலேயே அல்ல, உலகத்திலேயே முதன்முறையாக அனைத்து வாகனங்களையும் 6 மாதத்திற்குள் மின்வாகனமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

டெல்லியை மாற்றும் நடவடிக்கை ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்து தொடங்க வேண்டும். டெல்லி அரசுதுறைகளில் பயன்படுத்தப்பட இருக்கும் 2 ஆயிரம் மின்வாகனங்கள் அடுத்த 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். இந்த நடவடிக்கை மற்ற நகரங்களுக்கும், மத்திய அரசுக்கும் ஏன் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க விளையும் உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும்.இதற்காக டெல்லி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய மின்சார வாகன கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வாகனபதிவு இலவசம், சாலைவரி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மூலம் புதியமின்சார கார் வாங்கும் நபர்களுக்கு டெல்லியில் குறைந்தபட்சம் ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் டெல்லி அரசின் புதிய மின்வாகன கொள்கை அடிப்படையில் 12 நான்குசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதைப்பயன்படுத்தி டெல்லி முழுமையும் மின்வாகனங்களாக மாற வேண்டும். போக்குவரத்துறை இதை முன்மாதியாக கொண்டு களம் இறங்க வேண்டும். போக்குவரத்து துறைக்கு மற்ற அரசு துறைகள் மின்வாகன பயன்பாடு குறித்து ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும். நமது சுற்றுச்சூழல், நமது பசுமை, நமது சுத்தம் ஆகியவற்றை பாதுகாக்க டெல்லி மக்கள் மின்வாகனங்களுக்கு மாற வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அனைவரும் இணைந்து போராடி சுகாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இந்த 8 வார விழிப்புணர்வு பிரசாரத்தில் முதல் இரண்டு வாரம் இருசக்கர மற்றும் மூன்று சக்கர உரிமையாளர்கள் மின்வாகனத்திற்கு மாற பிரசாரம் மேற்கொள்ளப்படும். 3வது வாரத்தில் இருந்து 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மாற பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : All Delhi State Department ,Deputy Chief Minister Sisodia , All Delhi State Department vehicles will be converted to electric vehicles within 6 months: Deputy Chief Minister Sisodia's announcement
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி...