×

25,26-ம் தேதிகளில் பட்ஜெட் மீது விவாதம்; 27-ல் பதிலுரை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 27-ம் தேதி நிறைவு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு.!!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2-ம் தேதி ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது. இந்தநிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்  செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது.

துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம்  நடைபெற்றது. முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எந்த நாள்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மேலும், சபாநாயகர் தனபால் கூறுகையில், வரும் 25-ம் தேதி 2021-22-ம்  ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்கும். 26-ம் தேதி இடைக்கால பட்ஜெட் மீது 2-ம் நாள் பொது விவாதம் நடைபெறும். தொடர்ந்து, 27-ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு  பதிலுரை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021-2022-ம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடைபெறும். செலவினங்களுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்ட முன்முடிவு அறிமுகம் செய்யப்படும்.  27-ம் தேதி அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

25-ம் தேதி சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கும், விருதுநகர் மாவட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu Legislative Assembly ,Speaker ,Danapal , Debate on the budget on the 25th and 26th; 27th Response: Tamil Nadu Legislative Assembly session ends on 27th: Speaker Danapal's announcement. !!!
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...