×

பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் முழுமையாக விலகின: பிற பகுதிகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி: கல்வான் மோதலைத் தொடர்ந்து எல்லையில் பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் குவிக்கப்பட்ட இந்திய, சீன ராணுவப் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டமைப்புகள், ஆயுதங்கள், முகாம்கள், பதுங்கு குழிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இரு நாட்டு ராணுவம் இடையே இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, ஹாட் பிரிங்ஸ், கோக்ரா, தேப்சங் போன்ற பகுதிகளில் இந்திய, சீன படைகள் குவிக்கப்பட்டன. ராணுவ டாங்குகள் உட்பட பயங்கர ஆயுதங்கள் குவிக்கப்பட்டதால் போர் மூளும் சூழல் ஏற்பட்டது.எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. 9 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இரு ராணுவம் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 10ம் தேதியிலிருந்தே அப்பகுதியிலிருந்து படைகள் வாபஸ் பெறும் பணி தொடங்கியது.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாங்காங் திசோ ஏரியின் பிங்கர் 8 பகுதிக்கு சீனா ராணுவம் மீண்டும் விலகிச் செல்லும், பிங்கர் 3 பகுதியில் இந்திய ராணுவம் தனது நிரந்தர முகாமை அமைத்துக் கொள்ளும். தற்போது, ஏரிப் பகுதியில் படைகள் விலகி இருப்பதோடு அங்கு கொண்டு வரப்பட்ட ராணுவ டாங்கிகள், தற்காலிக கட்டமைப்புகள், முகாம்கள், பதுங்குகுழிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இதனை இரு நாட்டு ராணுவம் விரிவான ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து, ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் தேப்சங் ஆகிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. சீனாவுக்கு சொந்தமான மோல்டோ எல்லைப் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு நடக்க உள்ள இப்பேச்சுவார்த்தையில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள பங்கேற்க உள்ளனர்.



கல்வான் மோதலில் 4 வீரர்கள் பலியானதாக ஒப்புக் கொண்டது சீனா
எல்லையில் இருந்து படிப்படியாக படைகள் விலக்கிக் கொள்ளும் நிலையில், கல்வான் மோதலில் 4 வீரர்கள் பலியானதாக 8 மாதத்திற்குப் பிறகு சீன ராணுவம் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. கல்வான் மோதலில் சீன தரப்பில் 45 வீரர்கள் பலியானதாக ரஷ்யா உளவு தகவல்களும், 35 பேர் பலியானதாக அமெரிக்க உளவுத் தகவல்களும் தெரிவித்தன. ஆனால், இந்த விஷயத்தில் சீனா தொடர்ந்து மவுனம் காத்தது.  இந்நிலையில், 8 மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக பலி எண்ணிக்கையை சீனா வெளிப்படையாக கூறி உள்ளது. அந்நாட்டு ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பிஎல்ஏ தினசரியில், ‘கல்வான் மோதலில் 3 சீன வீரர்கள் சம்பவ இடத்தில் இறந்தனர். மற்றொரு வீரர், படையினருக்கு தகவல் தெரிவிக்க வரும் வழியில் ஆற்றில் மூழ்கி இறந்தார். ராணுவ தளபதி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது’ என கூறப்பட்டுள்ளது. மேலும், பலியான வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு, அவர்களுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Bangong Tiko Lake , Indian and Chinese forces withdraw completely from Pangong Tisho Lake area: Talks on other areas today
× RELATED தேர்தல் விதிமீறல்: திரிபுராவில் 26 அதிகாரிகள் சஸ்பெண்ட்