×

கிராமப்புற நூலகங்களே மிக முக்கியம்!: தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்கவும், அவை வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலகத்துறையின் கீழ் கன்னிமாரா பொதுநூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட, மத்திய நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1915 கிராம நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர மருத்துவமனைகள், சிறைகள் உள்ளிட்டவற்றிலும் நூலகங்கள் செயல்படுகின்றன. பல கிராமங்களில் நூலகங்களில் தான் செய்தி தாள்களே கிடைக்கின்றன. ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பள்ளிகள் திறப்பு. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை வசதியுடன் இயங்க அனுமதி. மதுக்கடைகளில் பார்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூலகங்கள் மட்டும் முன்பு போல இயங்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஏராளமான போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நூலகங்கள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். ஆகவே தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நூலகங்களையும் திறக்கவும் அவை வழக்கம் போல் இயங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் அரசு தரப்பில் நகர்ப்புற நூலகங்கள் திறக்கப்பட்டுவிட்டன.

கிராமப்புற நூலங்கங்களே முழுமையாக திறக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கிராமப்புற நூலகங்கள் மிகவும் முக்கியம் என்பதால் அவற்றை திறக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வசிக்கின்ற நகர்ப்புற நூலகங்களே திறக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற நூலகங்கள் விரைவாக திறக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து 4 வாரங்களுக்குள் அனைத்து நூலகங்களை திறக்கவும் வழக்கம் போல் இயங்கவும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Tags : libraries ,Government of Tamil Nadu ,Tamil Nadu , Tamil Nadu, Library, Opening, Government of Tamil Nadu, Icord Branch
× RELATED தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக்...