×

திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் மாவட்டம்தோறும் மகளிருக்கான தனி நீதிமன்றம் அமைக்கப்படும்: கனிமொழி எம்.பி பேச்சு

நாமகிரிப்பேட்டை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும், மாவட்டம்தோறும் மகளிருக்கான தனி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி., தெரிவித்தார். “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” பிரசார பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் ஆதரவு திரட்டினார். அப்போது, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தண்ணீர்தொட்டி பகுதியில், பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 2 ஆயிரம் பெண்கள், திமுகவில் இணைந்தனர்.

பின்னர், நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில்,தமிழக அரசு ரூ.420 கோடி வரை ஊழல் செய்துள்ளது. 100 நாள் வேலை வழங்குகிறோம் என்று கூறி மாதத்திற்கு 10 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி, அனைவருக்கும் வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்க சுழல் நிதியும் வழங்கப்படும். மேலும், நகைக்கடன் தள்ளுபடி, கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று தலைவர் அறிவித்துள்ளார்.

தற்போது முதியோர்களுக்கு உதவித்தொகை முழுமையாக வழங்கப்படுவதில்லை எனவும், அதிமுக ஆட்சியில் ரேஷன் கடைகள் நியாயமாக செயல்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த குறைகள் களையப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மாவட்டம்தோறும் மகளிருக்கான தனி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். ராசிபுரம் அருகே அத்தனூர் பேரூராட்சியில், நெசவாளர்களின் குறைகளை கனிமொழி எம்பி கேட்டறிந்தார். திமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். நெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்றார். ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் வாரச்சந்தையில்,கனிமொழி எம்பி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.


Tags : DMK ,court ,women ,Kanimozhi MP ,district , After the DMK comes to power, a separate court for women will be set up in every district: Kanimozhi MP speech
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு