×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: திருச்சியை சேர்ந்த இடைத்தரகர் கைது: விமான நிலையத்தில் சிக்கினார்: மகனுக்கு போலீஸ் வலை

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய உதவிய நபர் கைதுக்கு பயந்து சிங்கப்பூரில் தலைமறைவானார். தமிழகத்துக்கு திரும்பிய அவரை விமான நிலைய குடியுரிமை பிரிவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று பகல் 11.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை  குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த மோகன் என்ற பயணியின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அவர் சென்னை சிபிசிஐடி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

உடனே குடியுரிமை அதிகாரிகள் மோகனை விமான நிலையத்திலேயே சிறைபிடித்தனர். மேலும், சென்னை சிபிசிஐடி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். விசாரணையில், கடந்த 2019ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் சிலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினர். அவர்களுக்கு மோகன் இடைத்தரகராக செயல்பட்டு உதவி உள்ளார்.  இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தகவல் கிடைத்ததும், மோகன் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ரஷீத் என்ற புரோக்கர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மோகன் சிங்கபூரில் தலைமறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எல்ஓசி போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்பிய மோகனை குடியுரிமை அதிகாரிகள் கண்டுப்பிடித்து கைது செய்து சிபிசிஐடி போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த ஆள்மாறாட்டத்தில் மோகனின் மகன் தரூண் (26) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர், திருச்சியில் ஒரு பிரபல தனியார் கல்லூரி அலுவலகத்தில் அட்மிஷன் பிரிவில் பணியாற்றி வந்தார். நீட்ேதர்வு ஆள்மாறட்டம் விவகாரம் பெரிய அளவில் வெடித்ததும், தருண் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதாக தெரிவித்து சிறப்பு அனுமதி பெற்று, சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் தலைமறைவானது தெரியவந்தது.

Tags : Impersonation ,mediator ,Trichy ,airport , Neet selection, impersonation, mediator, arrest
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...