×

கேப்டன் கோஹ்லி போராட்டம் வீண் 227 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி

சென்னை: இங்கிலாந்து அணியுடன் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 227 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. தனது 100வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ரூட் இரட்டை சதம் விளாசி அசத்தினார். சிப்லி, ஸ்டோக்ஸ் அரை சதம் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 73, பன்ட் 91, வாஷிங்டன் 85*, அஷ்வின் 31, கில் 29 ரன் எடுத்தனர். பாலோ ஆன் கொடுக்காமல், 241 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 178 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து, 420 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரோகித் 12 ரன் எடுத்து வெளியேற, இந்தியா 4ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்திருந்தது.
கில் 15, புஜாரா 12 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். புஜாரா மேற்கொண்டு 3 ரன் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். கில் - கோஹ்லி இணைந்து 3வது விக்கெட்டுக்கு 34 ரன் சேர்த்தனர். அரை சதம் அடித்த கில் (50 ரன், 83 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) ஆண்டர்சன் வேகத்தில் கிளீன் போல்டானார். ஒரு முனையில் கேப்டன் கோஹ்லி உறுதியுடன் போராட... மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அதிலும் ரகானே, வாஷிங்டன், நதீம் ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

கோஹ்லி அதிகபட்சமாக 72 ரன் (104 பந்து, 9 பவுண்டரி) விளாசி விடை பெற்றார். ஜஸ்பிரித் பும்ரா 4 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் பிடிபட, இந்திய அணி 58.1 ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் லீச் 4, ஆண்டர்சன் 3, ஆர்ச்சர், பெஸ், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 227 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணியின் கேப்டன் ரூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் இதே மைதானத்தில் வரும் 13ம் தேதி தொடங்குகிறது.

ஒருங்கிணைந்து செயல்படவில்லை...
முதல் இன்னிங்சில் பந்துவீச்சு மூலம் இங்கிலாந்துக்கு போதுமான நெருக்கடியை தரவில்லை. பொதுவாக பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள், அஷ்வின் சிறப்பாக செயல்பட்டனர். துணை ஸ்பின்னர்கள் (நதீம், வாஷிங்டன்) பங்களிப்பு போதுமானதாக இல்லை. முதல் இன்னிங்சில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருந்தால் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, முதல் 2 நாட்கள் களம் மெதுவாக இருந்ததால் விக்கெட் விழவில்லை. அது இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தது. எனவே அவர்களால் பெரிய எண்ணிக்கையில் ரன் குவிக்க முடிந்தது.

இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாகப் பந்துவீசினோம். இங்கிலாந்து வீரர்கள் தொழில் முறை கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமோ அப்படி விளையாடினார்கள். பந்துவீச்சாளர்கள் கூட்டாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பரவாயில்லை... செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை புரிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வலுவாக வருவோம். - இந்திய அணி கேப்டன் கோஹ்லி

ஆட்ட நாயகன்: ஜோ ரூட்:ஆண்டர்சன் ஒயின்!
இந்த 5 நாட்களும் அருமையான நாட்கள். நாங்கள் திட்டமிட்ட வியூகங்களை களத்தில் செயல்படுத்திய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். அதை அனுபவித்து செய்தோம். டாஸ்  வென்றது முக்கிய திருப்பமாக இருந்தது. முதல் இன்னிங்சில் நாங்கள் நல்ல எண்ணிக்கையை எட்டினோம். வெளிநாட்டு சூழலில் 20 விக்கெட் கைப்பற்றியது பெரிய விஷயம். பந்துவீச்சாளர்களின் பங்கு இந்த வெற்றியில் முக்கியமானது. இலங்கை உடனான வெற்றி புதிய நம்பிக்கையை தந்தது.

ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எல்லாவிதத்திலும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஜேம்ஸ் ஆண்டர்சனின் பங்களிப்பு முக்கியமானது. அவர் 38 வயதிலும் சிறப்பாக செயல்படுகிறார். ஆண்டர்சன்  ஒயின் போன்றவர். நாளாக நாளாக அவரது சிறப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தனக்குத் தானே சவால் விட்டு இலக்கை எட்டுகிறார்.  களத்தில் அவர் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். மொத்தத்தில் இது சிறந்த வாரமாக அமைந்துள்ளது.- இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

Tags : Kohli ,struggle ,team ,Indian , Captain Kohli's struggle was in vain as India lost by 227 runs
× RELATED கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்...