பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் போட்டியிட மஜத-பாஜ கூட்டணி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசவராஜ் ஹொரட்டியும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நசீர்அகமது ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். கர்நாடக சட்டமேலவை தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி காங்கிரஸ்-மஜத கூட்டணியுடன் மேலவை தலைவராக பிரதாப்சந்திரஷெட்டி பொறுப்பேற்றார். இரண்டாண்டுகள் தலைவராக இருந்த நிலையில், அவருக்கு எதிராக பாஜ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதன் மீது விவாதம் நடத்த வாய்ப்பு கொடுக்காமல் தவிர்க்க முடிவு செய்த பிரதாப்சந்திரஷெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்து கடந்த 4ம் தேதி துணைத்தலைவர் எம்.கே.பிராணேஷிடம் கடிதம் கொடுத்தார்.
இந்நிலையில் காலியாக இருக்கும் மேலவை தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. மஜத-பாஜ கூட்டணி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசவராஜ் ஹொரட்டி மேலவை செயலாளர் கே.ஆர்.மகாலட்சுமியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் கோட்டா சீனிவாச பூஜாரி, எம்டிபி நாகராஜ், மேலவை உறுப்பினர்கள் மஹாந்தேஷ் கவடகிமட், ஆயனூர் மஞ்சுநாத், நாராயணசாமி, ரவிகுமார், பாரதிஷெட்டி, அப்பாஜி
கவுடா, ரமேஷ்கவுடா ஆகியோர் இருந்தனர். மனு தாக்கல் செய்தபின் ஹொரட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, ``பாஜ மற்றும் மஜத கூட்டணி வேட்பாளராக நான் மனு தாக்கல் செய்துள்ளேன்.
மஜத தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா இந்த வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலவையில் மஜதவுக்கு உறுப்பினர் பலம் குறைவாக இருந்தாலும் பாஜ ஆதரவு கொடுப்பதன் மூலம் வெற்றி பெறுவேன். காங்கிரஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் இதை வரவேற்கிறேன்’’ என்றார். அமைச்சர் கோட்டா சீனிவாசபூஜாரி கூறும்போது, ``மேலவை வரலாற்றில் 7 முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுபவமுள்ள ஹொரட்டியை தலைவராக்குவது மகிழ்ச்சி தருகிறது’’ என்றார். பாஜ உறுப்பினர் ரவிகுமார் கூறும்போது, ``ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் உரிய கவுரவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மேலவையில் பாஜவுக்கு 31 உறுப்பினர்கள் பலமிருந்தும் குறைவான உறுப்பினர்கள் கொண்ட மஜதவுக்கு தலைவர் பதவியை விட்டு கொடுத்துள்ளோம்’’ என்றார்.
இதனிடையில் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்று எதிர்பார்த்த நிலையில் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் நசீர்அகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று சட்ட மேலவை செயலாளர் கே.ஆர்.மகாலட்சுமியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜமீர்அகமதுகான், மேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் உள்பட பலர் இருந்தனர். மனுதாக்கல் செய்தபின், நசீர்அகமது செய்தியாளர்களிடம் கூறும்போது, கட்சி தலைமையின் உத்தரவு ஏற்று மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
* யாருக்கு என்ன பலம்
75 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையில் பாஜ-31, காங்கிரஸ்-29, மஜத-13 மற்றும் சுயேச்சை 1 என்ற வகையில் உறுப்பினர் பலம் உள்ளது. மேலவை தேர்தலில் பாஜ-மஜத கூட்டணிக்கு 45 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. காங்கிரசுக்கு 29 உறுப்பினர் பலம் மட்டுமே உள்ளது. இருப்பினும் வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளது. இன்று காலை மனுவாபஸ் பெற காலவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நசீர்அகமது மனு வாபஸ் பெற்றால், போட்டியில்லாமல் பசவராஜ் ஹொரட்டி தேர்ந்தெடுக்கப்படுவார். இல்லையெனில் தேர்தல் நடக்கும்.