சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு உள்நாட்டு விமானமாக கவுகாத்தி சென்றுவிட்டு, பின்னர் நேற்று அதிகாலை மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தது. அந்த விமானம், மீண்டும் நேற்று காலை டெல்லி புறப்பட தயாரானது. அதற்கு முன்னதாக விமானத்தை சுத்தப்படுத்தும்போது, விமானத்திற்குள் மறைத்து வைத்திருந்த பையிலிருந்து 1.20 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் கண்டெடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விமான நிலையம் மற்றும் அந்த விமானத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடத்தல் ஆசாமியை அடையாளம் கண்டனர். விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த முகபத் கான் (56) என்பவர்தான் அந்த கடத்தல் ஆசாமி என்று தெரிய வந்தது. இதையடுத்து, கடத்தல் ஆசாமி, செல்போன் டவரை கண்காணித்தனர். அந்த ஆசாமி மற்றொரு தனியார் விமானத்தில் கவுகாத்தியிலிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரியவந்தது.
சுங்கத்துறையினர் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காத்திருந்து முகபத் கான் விமானத்தை விட்டு இறங்கி வெளியே வந்ததும் அவரை மடக்கிப் பிடித்தனர். அதோடு அவரை தனியறைக்குக்கொண்டு சென்று சோதனையிட்டனர். அவரது இடுப்பை சுற்றி கட்டியிருந்த துணிப்பையில் மேலும் தங்கக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவைகளின் எடை 1.12 கிலோ. இதையடுத்து அவரை கைது செய்தனர். விசாரணையில், விமானத்திற்குள் மறைத்து வைத்திருந்த 1.20 கிலோ தங்கம் தான் கடத்தி வந்தது தான் என்பதை ஒப்புக்கொண்டார்.
பின்னர், காஞ்சிபுரத்தை சேர்ந்த சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்த முகபத் கான், துபாயிலிருந்து ரூ.1.14 கோடி மதிப்புடைய 2.32 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளது தெரியவந்தது. கடத்தல் தங்கத்தை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வசதியில்லாததால் விமானத்திலேயே மறைத்து வைத்துவிட்டு, வெளியே வந்திருந்தார். அந்த விமானம், கவுகாத்தி செல்வதை அறிந்து மீண்டும் மற்றொரு விமானத்தில் கவுகாத்தி சென்றார். ஆனால், அவரால் அங்கும் விமானத்திற்குள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை எடுக்க முடியவில்லை. இதனால் மீண்டும் வேறு விமானத்தில் சென்னை திரும்பியவரை சுங்கத்துறை பொறி வைத்து பிடித்தனர்.