×

கொரோனாவிற்கு பின்னர் ரயில்களில் பயணிகள் இயல்பு பயணம்: வருவாய் ஈட்டுவதில் சாதனை படைக்கும் மதுரை கோட்டம்

நெல்லை: கொரோனாவிற்கு பின்னர் ரயில்களில் பயணிகள் இயல்பாக பயணிக்க தொடங்கியுள்ள நிலையில், மதுரை கோட்டம் வருவாய் ஈட்டுவதில் சாதனை படைத்துள்ளது.தெற்கு ரயில்வே வருமானம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை கோட்டம் சாதனை படைத்து வருகிறது. விரிந்த எல்கைகளை கொண்ட மதுரை கோட்டத்தில் பயணிகள் அதிகம் ரயிலில் பயணிக்கின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை எப்போதுமே அதிக வருமானத்தை அள்ளி தருகின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் மதுரை இரயில் நிலையத்திலிருந்து மற்ற ரயில் நிலையங்களுக்கு 1,73,559 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் வருமானம் ரூ. 5 கோடியே 81 லட்சத்து 29 ஆயிரத்து 188 என வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல மதுரைக்கு மற்ற ரயில் நிலையங்களில் இருந்து 1,85,620 பயணிகள் வருகை புரிந்துள்ளனர். நெல்லையிலிருந்து 1,23,161 பயணிகளும், தூத்துக்குடியிலிருந்து 37,965 பயணிகளும் திண்டுக்கல்லிலிருந்து 53610 பயணிகளும் விருதுநகரிலிருந்து 31,537 பயணிகளும் கோவில்பட்டியிலிருந்து 30451 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

 இதன்மூலம் நெல்லை ரயில் நிலையத்திற்கு 4கோடியே 96லட்சத்து 29ஆயிரத்து 930 ரூபாயும், தூத்துக்குடி ரயில் நிலையம் ரூ.1,78,19,867, திண்டுக்கல் ரயில் நிலையம் 1,45,71,982 ரூபாயும், விருதுநகர் ரயில் நிலையம் 1,06,19,743 ரூபாயும், கோவில்பட்டி ரயில் நிலையம் 1,02,72,628 ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளது. அதேபோல ஜனவரி மாதத்தில் பயணிகள் ரயில் பார்சல் வருமானமாக ரூபாய் 36 லட்சத்து 40 ஆயிரத்து 897 ஈட்டப்பட்டுள்ளது. இது 2020 டிசம்பர் மாத பார்சல் வருமானத்தை காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும்.

சரக்கு போக்குவரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாதனை நிகழ்த்தி வரும் மதுரை கோட்டம், இவ்வாண்டு ஒரே நாளில் ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி சாதித்துள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து இரண்டாவது முறையாக 25 ரயில் பெட்டிகளில் டிராக்டர்கள் வங்காளதேசத்தில் உள்ள பேனபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் ரூ.23 லட்சத்து 15 ஆயிரத்து 954 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் தூத்துக்குடியிலிருந்து விவசாய உரப் பொருட்கள், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி, மானாமதுரையில் இருந்து கருவேலங்கரி, வாடிப்பட்டியிலிருந்து டிராக்டர்கள் ஆகியவை முதன்முறையாக ஒரே நாளில் (ஜன.29ம் தேதி) அதிகபட்சமாக 306 ரயில் பெட்டிகளில் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ1 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 302 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.



Tags : Corona ,Madurai Kottam , Passenger travel on trains after Corona: Madurai Kottam, a revenue earner
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...