×

ஆற்காடு அருகே லாரியில் ஏற்றி சென்றபோது சாலையில் கெமிக்கல் கொட்டியதால் பொதுமக்களுக்கு வாந்தி, தலை சுற்றல்-20 பைக்குகள் வழுக்கி விபத்து

ஆற்காடு : ஆற்காடு அருகே சாலையில் கொட்டிய கெமிக்கல்லால் பொதுமக்களுக்கு வாந்தி தலை சுற்றல் ஏற்பட்டது. மேலும் 20க்கும் மேற்பட்ட  பைக்குகள் வழுக்கி விபத்துக்குள்ளானது.சென்னையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம்,  மேல்விஷாரம் அருகே உள்ள தனியார் கம்பெனிக்கு தேவையான கெமிக்கல் மற்றும் சோப்பு ஆயில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் வந்தது.

இரவு 8 மணியளவில் கீழ்விஷாரம் ராசாத்துபுரம் வழியாக சென்றபோது, லாரியில் இருந்த பேரலில் உடைப்பு ஏற்பட்டு ராசாத்துபுரத்திலிருந்து மேல்விஷாரத்தில் உள்ள அரசு பள்ளி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் கெமிக்கல் கீழே கொட்டியபடி வந்தது.

கெமிக்கல் வாசனை அப்பகுதியில் பரவியதால் சிலருக்கு திடீரென தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக பைக்குகளில் சென்ற 20க்கும் மேற்பட்டோர் கெமிக்கலில் வழுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதியினர் ஆற்காடு தீயணைப்பு நிலையம் மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தும், மணலை கொட்டியும் சாலையில் இருந்த கெமிக்கலை அகற்றினர்.

இதற்கிடையில் கெமிக்கல் கொட்டியபடி சென்ற லாரியை பொதுமக்கள் கத்தியவாடி கூட்ரோடு அருகே மடக்கி பிடித்து ஆற்காடு போலீசில் ஒப்படைத்தனர். லாரியை போலீசார் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : public ,road ,Arcot , Arcot: Vomiting caused dizziness in the public due to a chemical spilled on the road near Arcot. And more than 20 bikes
× RELATED 5,662 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்