×

1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் போல் ‘மாஸ்’ காட்ட கள் இயக்கம் ஆலோசனை

ஈரோடு: மொடக்குறிச்சி தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டதை போல இந்த தேர்தலிலும் மாஸ் காட்ட திட்டமிட்டு வருவதாக கள் இயக்கம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது நாடே பேசும் அளவுக்கு 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தை கிடுகிடுக்க வைத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் சீர்திருத்தம் செய்யக்கோரியும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், ஒரே தொகுதியில் 1033 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 3 பேர் மட்டுமே அரசியல் கட்சி வேட்பாளர்கள். மீதமுள்ள 1030 பேரும் விவசாயிகள் தான்.

மொடக்குறிச்சி தொகுதிக்கான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் பெரும்பாடு பட்டது. இதே போல வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் மாஸ் காட்ட கள் இயக்கம் ஆலோசித்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: தேர்தல் டெபாசிட் தொகை உயர்த்த வேண்டும், யாருக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும், ஒரு வேட்பாளருக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 1030 வேட்பாளர்கள் போட்டியிட்டோம்.

இது இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பேசும் பொருள் ஆனது. இதே போல தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. எந்த மாதிரியான திட்டம் என்பது தற்போதைக்கு வெளியிட முடியாது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்ட பின் அதிகாரப்பூர்வமாக எங்களது திட்டம் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.

Tags : Mass ,elections ,Assembly , The ‘Mass’ show s movement advised as in the 1996 Assembly elections
× RELATED 2026-ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவிப்பு!