×

போராட்டத்தை வாபஸ் பெற்றதால் ராமேஸ்வரம் மீனவர்கள் 400 படகில் கடலுக்கு பயணம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் முடிந்ததால் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 400 பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தன. சிறிய விசைப்படகு மீனவர்கள் மட்டும் அவ்வப்போது கடலில் மீன்பிடித்து வந்தனர்.

இதற்கிடையே மீனவர்களால் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையிலும், அன்றாட வருவாய் இல்லாமல் கஷ்டப்படும் மீனவர்களின் வாழ்வாதாராம் கருதியும் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையிலுள்ள மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் அனுமதி டோக்கன் பெற்று, 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பின் கடலுக்கு செல்வதால் மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இலங்கை கடற்படையின் பிரச்னை இல்லாமல் இருந்தால் கடலில் நிம்மதியாக மீன் பிடித்து திரும்பலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். முன்னதாக மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளை சோதனையிட்ட பிறகே டோக்கன் வழங்கினர்.

Tags : fishermen ,Rameswaram ,protest , Struggle, return, Rameswaram fishermen, 400 boat, voyage
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு