×

காதல் உறவுக்காக போக்சோ சட்டத்தில் சிக்குவதால் டீன் ஏஜ் இளைஞர்கள் பலர் வாழ்க்கையை இழக்கிறார்கள்: ஐகோர்ட் கருத்து

சென்னை: காதல் உறவில் உள்ள பல பதின்பருவ (டீன்ஏஜ்) இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி, திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் இந்திரனுக்கு எதிராக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய இந்த வழக்கு தடையாக இருப்பதால்,  இந்திரனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணும், புகார் அளித்த அவரது தாயும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். விசாரணையின் போது காணொலி காட்சி மூலம் ஆஜரான பெண்ணின் தாய், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி, தனது நிர்பந்தத்தால் மட்டுமே இந்திரன் தன்னை வீட்டை விட்டு அழைத்துச் சென்றதாக  மைனர் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவரது தாய்க்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் மன உளைச்சலை மட்டும் அதிகரிக்குமே தவிர, வேறு எந்த பயனும் இருக்காது எனக் கூறி, இந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், இதுபோல், காதல் உறவுக்காக  கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்படுவதால் பதின்பருவ இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். போக்சோ சட்டம், இதுபோன்ற நோக்கத்துக்காக கொண்டு வரப்படவில்லை. இதுபோன்ற வழக்குகளை கருத்தில் கொண்டு, போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் யோசனை தெரிவித்துள்ளார்.

Tags : teenagers ,Pok போகmon ,iCourt , Pokco frame for romantic relationships among young teenage lives lost cikkuvat: High Concept
× RELATED பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!