பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் பாஜ-மஜத கூட்டணி அமைகிறது. மேலவை தலைவராக மஜதவை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி பதவியேற்க வாய்ப்புள்ளது. மொத்தம் 75 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் காங்கிரஸ்-29, பாஜ-31, மஜத-14, சுயேட்சை-1 என 71 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த மூன்றாண்டுகளாக மேலவையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி இருந்தது. மேலவை தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப்சந்திரஷெட்டியும், துணைதலைவராக மஜதவை சேர்ந்த தர்மேகவுடாவும் இருந்தார். இந்நிலையில் பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் பாஜ கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திடீரென மஜத ஆதரவு கொடுத்ததின் மூலம் காங்கிரஸ்-மஜத கூட்டணி முறிந்துவிட்டது.
பாஜ-மஜத கூட்டணி உருவாகியுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிராக கடந்த 13ம் தேதி மீண்டும் பாஜ நம்பிக்கையில்லா தீர்மானம் ெகாண்டு வந்தது. கர்நாடக சட்டபேரவை மற்றும் மேலவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் ஆளுநர் உரை முடிந்த பின், நாளை முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும்போது, மேலவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த பாஜ உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள். விவாதத்திற்கு வாய்ப்பு கொடுக்காமல் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஷெட்டி முடிவு செய்துள்ளார்.
காலியாகும் தலைவர் பதவியை 14 மஜத உறுப்பினர்கள் பலம் மட்டுமே இருக்கும் அக்கட்சிக்கு வழங்க பாஜ முடிவு செய்துள்ளது. மஜத சார்பில் கடந்த 6 முறை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட அனுபவம் பெற்றுள்ள பசவராஜ் ஹொரட்டிக்கு தலைவர் பதவி வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டபேரவையின் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஹொரட்டி தலைவராக பதவியேற்க வாய்ப்புள்ளது. இதனிடையில் மேலவை துணைத்தலைவர் வேட்பாளராக பிரணேஷை பாஜ தலைமை அறிவித்துள்ளது. அவர் இன்று மனுதாக்கல் செய்கிறார். நாளை தேர்தல் நடக்கிறது.