×

மத்திய அரசின் விருதான பத்ம மற்றும் வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரை விளையாட்டு திறனை அங்கீகரித்து, பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு கலைக்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற தமிழ் அறிஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திருக்குறளையும், சங்க இலக்கியங்களையும் இனிய தமிழில் நகைச்சுவை கலந்து விளக்கி, தமிழ் மொழிக்கு அரும் பணி ஆற்றி வரும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. வயதான நிலையிலும் விவசாயம் செய்யும் கோயம்புத்தூரை சேர்ந்த பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

மறைந்த ஓவியர் கே.சி.சிவசங்கரை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. கரூரை சேர்ந்த மாராச்சி சுப்புராமன் சமூக சேவையை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. மருத்துவ துறையில், சிறப்பாக பணியாற்றிய டாக்டர் திருவேங்கடம் வீரராகவனின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அறிவித்துள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தொழில் வளர்ச்சியினை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது. சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மறைந்த சுப்பிரமணியன் சமூக சேவையை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எதிரிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மறைந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருதினை பெற்ற இவர்கள் அனைவருக்கும்  தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகிறேன்.


Tags : Chief Minister ,recipients ,Padma ,Central Government , Federal Government Award CM congratulates Padma and Veer Chakra recipients
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...