×

மின் உற்பத்திக்கு தண்ணீர் எடுப்பதால் பைக்காரா அணை நீர்மட்டம் சரிவு

ஊட்டி: மின் உற்பத்திக்காக தொடர்ந்து தண்ணீர் எடுத்து வரும் நிலையில், பைக்காரா அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவாணி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, கிளன்மார்கன், மரவக்கண்டி போன்ற அணைகளின் மூலம் நீர் மின் நிலையங்களில் இருந்து நாள்தோறும் மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. கோடை காலங்களில் மின் தேவை அதிகரிக்கும்போது, அனைத்து நீர் மின் நிலையங்களும் இயக்கப்பட்டு மின் தட்டுப்பாடு சீரமைக்கப்படுகிறது. இதனால், கோடை காலங்களில் மின் உற்பத்திக்காக பயன்படும் அணைகள் அனைத்திலும் தண்ணீரின் அளவு மிகவும் குறையும். இம்முறை பைக்காரா மின் நிலையம் மற்றும் சிங்காரா மின் நிலையங்களில் நாள்தோறும் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தற்போது பைக்காரா அணையில் இருந்து தினமும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதனால், தண்ணீர் அளவு குறைந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில் அணைக்கு படகு சவாரி மேற்க்கொள்ள செல்லும் சுற்றுலா பயணிகள் படகு நிற்கும் இடமான ‘போட்ஜெட்டி’க்கு செல்ல தாழ்வான படிகளில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தாழ்வான பகுதிக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, மின் உற்பத்திக்காக மின் வாரியம் அணையில் இருந்து தண்ணீர் எடுக்குமாயின் கோடை சீசனின்போது, அணையில் நீர்மட்டம் முற்றிலும் சரிந்து விடும். இதனால், சுற்றுலா பயணிகள் அணையின் தாழ்வான பகுதிக்கு சென்று படகு சவாரி செய்ய முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Tags : Baikara Dam , Baikara Dam water level decline due to water intake for power generation
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்